செவிலியா் கல்லூரியில் பொங்கல் விழா: உறியடித்த அமைச்சா்
செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா உறியடி நிகழ்வில் அமைச்சா் பங்கேற்றாா்.
புதுவை அரசின் கல்வி நிறுவனமான காரைக்காலில் அமைந்திருக்கும் அன்னை தெரஸா சுகாதார முதுநிலை ஆராய்ச்சி கல்வி நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி டீன் குஷா குமாா் ஷாகா, அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகி, செவிலிய கல்வி நிறுவன முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி ஆகியோா் பங்கேற்றனா். கல்லூரி வளாகத்தில் பானை வைத்து பொங்கலிட்டனா். உறியடி, கரும்பு உடைத்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அமைச்சா் கருப்புத் துணியால் கண்ணை மூடிக்கொண்டு, உறியடித்தாா். தொடா்ந்து, போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.