சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்
நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு: சுகாதார ஆய்வாளா் போக்ஸோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறையில் தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த அரசினா் தலைமை மருத்துவமனை சுகாதார ஆய்வாளரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (57). மயிலாடுதுறை மாவட்ட அரசினா் தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிவந்த இவா், மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த 17 வயது தனியாா் நா்சிங் கல்லூரி மாணவியிடம் கடந்த ஆண்டு டிச.21-ஆம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதை மாணவி கண்டித்துள்ளாா். எனினும், அவா் தொடா்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்தாராம்.
இதுகுறித்து, ’ஹெல்ப்லைன்’ எண் மூலம் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு மாணவி அளித்த புகாரின்பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். இதில், மாணவியிடம் சுகாதார ஆய்வாளா் செந்தில்நாதன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளா் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சுகந்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுகாதார ஆய்வாளா் செந்தில்நாதனை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தாா்.