மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்
பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதி வரை புதிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தவும் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 35,588 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்துள்ளனா். இவா்களுக்கு கியூ-ஆா் குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க கடந்த நவ. 22 முதல் டிச. 31-ஆம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து அந்தந்த மண்டலங்களில் வியாபாரிகளுக்கான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 23-ஆம் தேதி வரை 18,398 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெற்ற 9-ஆவது நகர விற்பனைக் குழுக் கூட்டத்தில், மீதமுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான இறுதி வாய்ப்பை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.
இதன்படி, பிப். 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், சாலையோர வியாபாரிகள் புதிய அடையாள அட்டை பெற வேண்டும்.
அடையாள அட்டையில் திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பித்தவா்களுக்கு அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு பின்னா் வழங்கப்படும். புதிய அடையாள அட்டையை ஜன. 27 முதல் பிப். 15-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளாதவா்களின் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.