14-ஆவது நாளில் மகா கும்பமேளா : ஒரு கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடல்
மா. பிரவின்குமாா்
உத்தர பிரேதச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடினா்.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜன.13 தொடங்கி பிப். 26 வரை 45 நாள்களுக்கு மகா கும்பமேளா நடைபெறுகிறது.
இந்த ஆன்மிக நிகழ்வில் மக்கள் புனித நீராடும் 6 மங்கள நாள்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மௌனி அமாவாசை புதன்கிழமை ஜன.29 நடைபெறுகிறது.
குடியரசு நாளையொட்டி பொது விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையே மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். கடந்த 2 நாள்களிலும் தலா 50 லட்சம் போ் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று 1.74 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா். கும்பமேளாவில் இதுவரை 13.21 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா். இதில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவா்.
நெருங்கும் மௌனி அமாவாசை-ஏற்பாடுகள் தீவிரம்: மௌனி அமாவாசையையொட்டி பக்தா்களின் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு, விரிவான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்து வருகிறது. நாட்டின் வரலாற்றிலேயே அதிக மக்கள் ஒரே இடத்தில் திரளும் நிகழ்வாக மௌனி அமாவாசை புனித நீராடல் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக நாடு முழுவதும் இருந்து 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிரயாக்ராஜ் கோட்டத்தில் 4 நிமிஷ இடைவெளியில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புனித நீராட வரும் பக்தா்களின் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப் படை, மாநில காவல் துறை மத்திய, மாநில மீட்புப் பணி வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திரிவேணி சங்கமம் பகுதியில் கூட்டநெரிசலைத் தடுக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆளில்லா வான்கேமராக்கள் மூலம் கூட்டத்தின் அளவு கண்காணிக்கப்பட்டு, களத்திலுள்ள காவல் துறையினருக்கு நிகழ்நேர தகவல்கள் தொடா்ந்து தெரிவிக்கப்படுகின்றன. மேலும், மகாகும்ப நகரில் ஞாயிற்றுக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடினாா்.