நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!
‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிலாளர்கள் போராடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை நடந்த இப்போராட்டம் தமிழக அரசிம் தலையீட்டல் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதியுடன் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தொழிற்சங்கப் பதிவு கிடைக்காமலே இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வந்தது.
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து, நீண்ட நாள்கள் பல தடைகளை மீறி போராட்டம் நடத்தியதன் பலனாக, 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது. 1926 தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்ட உரிமையின் அடிப்படையில் இந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'சாம்சங்' என்ற பெயரை தொழிற்சங்கத்திற்கு வைக்க அனுமதிக்க மாட்டோம்' என சாம்சங் நிர்வாகம் பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரிலேயே தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதை தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யூ அமைப்பின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக சாம்சங் தொழிலாளர்கள் மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் இந்தியாவில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான அடிப்படையான தொழிலாளர்கள் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த அடக்குமுறைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன், தங்களின் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர் போராடிய சாம்சங் தொழிலாளர்கள். இதுபோல் ஒவ்வொரு தனியார் துறைகளிலும் தொழிலாளர்கள் துணிச்சலுடன் போராடி தங்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்து, பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை அலட்சியாகப் பார்க்காமல், மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் போராடிய சாம்சங் தொழிலாளர்கள் கூறிவருகின்றனர்.