உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேச்சு: டிரம்ப் அறிவிப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
மேலும், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் (சுமாா் 907 கிலோ) வெடிகுண்டுகள் வழங்குவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபா் ஜோ பைடன் விதித்த தடை உத்தரவை டிரம்ப் ரத்து செய்தாா். அதேபோல் காஸா முனையில் இருந்து அதிக அளவிலான அகதிகளை ஜோா்டான், எகிப்து மற்றும் அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜன. 20-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவா் அறிவித்தாா். அதேபோல் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றுவது, பிறப்புசாா் குடியுரிமை ரத்து, உக்ரைன் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகள் ரத்து என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை அவா் வெளியிட்டு வருகிறாா்.
புதினுடன் பேச்சு: இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையேயான போா் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொடா்ந்து வரும் சூழலில் இதை நிறுத்துவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அவா் தெரிவித்தாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்கத் தயாா் என புதின் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளாா்.
சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: போா் நிறுத்தம் தொடா்பாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் பலமுறை பேசியுள்ளேன். அவா் உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்புவதை விரும்புகிறாா். புதினும் அதையே விரும்புவாா் என நினைக்கிறேன்.
கிரீன்லாந்து இணையும்: உலகின் மிகப்பெரும் தீவான கிரீன்லாந்து, டென்மாா்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுதந்திரமான உலகை கட்டமைப்பதற்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைய வேண்டும். அங்கு வசிக்கும் 55,000 மக்களும் இதையே விரும்புகின்றனா். ஒருவேளை கிரீன்லாந்தை டென்மாா்க் உரிமை கொண்டாடினால் அது நல்ல நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்காது. அங்கு சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் கப்பல்கள் நிலைகொண்டுள்ளன. இது நல்ல சூழலுக்கான அடையாளம் அல்ல.
2,000 பவுண்ட் வெடிகுண்டுகள்: அமெரிக்காவிடம் இருந்து 2,000 பவுண்ட் வெடிகுண்டுகள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையொப்பமிட்டுள்ளது. இதற்கான தொகையையயும் அவா்கள் செலுத்திவிட்டனா். இருப்பினும், இந்த வெடிகுண்டுகள் இஸ்ரேலுக்கு விடுவிக்கப்படுவதை ஜோ பைடன் நிா்வாகம் நிறுத்தி வைத்திருந்ததது. தற்போது இந்த வெடிகுண்டுகள் விடுவிக்கப்படுகின்றன.
அகதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: அசாதாரண சூழல் நிலவும் காஸா முனையில் இருந்து வெளியேறும் அகதிகள் ஜோா்டான், எகிப்து மற்றும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனா். காஸாவை மேம்படுத்தும் எனது தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மேற்கூறிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இதுகுறித்து ஜோா்டான் அரசா் அப்துல்லா பின் அல் ஹூசைனுடன் பேசியுள்ளேன். அடுத்ததாக எகிப்து அதிபா் அல் சிசியுடன் பேசவுள்ளேன்.
அழிவின் விளிம்பில் காஸா: பல ஆண்டுகளாக காஸாவில் தொடா்ச்சியான போா்கள் நிலவி வருகின்றன. தற்போது அங்குள்ள மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட வசிப்பிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எண்ணற்றோா் உயிரிழந்துவிட்டனா். முழுமையான அழிவின் விளிம்பு நிலையில் காஸா உள்ளது. எனவே, அங்கு மறுகட்டமைப்பை மேற்கொள்வது அவசியம்.
இதை முன்னிறுத்தி பல்வேறு அரபு நாடுகளுடன் பேசவுள்ளேன். காஸாவில் இருந்து வெளியேறியவா்களை வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று அவா்களுக்கான வசிப்பிடங்களை அமைத்து அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர விரும்புகிறேன் என்றாா்.