இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு... டிரம்ப்புக்கு சவால்விடும் கனடா!
கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது வருகிற பிப். 1 அன்று நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு பேசுகையில், “டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கான எரிசக்தி விநியோகங்களை துண்டிப்பதன் மூலம் அமெரிக்கர்களுக்கு மின்சாரம் வழங்குவதை குறைக்க கனடா தயாராக உள்ளது.
இதையும் படிக்க | டிரம்ப் எச்சரிக்கை... அடிபணிந்த கொலம்பியா!
நாங்கள் மிச்சிகனுக்கும், நியூயார்க் மாநிலத்திற்கும், விஸ்கான்சினுக்கும் செல்லும் மின்சாரத்தை துண்டிப்போம்" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு வரும் இயற்கை எரிவாயு மொத்தமும் கனடாவில் இருந்தே வருகிறது. மேலும், அமெரிக்காவின் முக்கிய மின்சார விநியோகமும் கனடாவிலிருந்தே கிடைக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓன்டாரியோ மாகாணத்தில் 15 லட்சம் அமெரிக்க வீடுகளுக்கு கனடா நேரடியாக மின்சாரம் வழங்கியது. மேலும் மிச்சிகன், மினசோட்டா, நியூயார்க் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்குவதில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அமெரிக்க அதிபர் கனடா மீதான வரிகளைத் தொடர நினைத்தால், கனடா அதற்கான தகுந்த பதில்களை அளிக்கும்” எனத் தெரிவித்தார்.
இதன்படி, டிரம்ப் தனது முடிவை மாற்றாவிட்டால் வருகிற பிப்ரவரி முதல் அமெரிக்காவிற்கான அனைத்து எரிசக்தி விநியோகங்களையும் கனடா துண்டிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.