நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்
நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் முதலைப்பட்டி புதூரில் இரண்டு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பகுதியில் உள்ள பேருந்து நிலையம், நகரப் பேருந்துகள் இயக்கப்படும் பழைய பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், புதிய பேருந்து நிலையம் செல்லாமல், நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் இருசக்கர வாகனங்களை வரிசை கட்டி நிறுத்தி வைத்து விட்டு சென்றனா்.
இதனால் ஆட்சியா் அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடம் போல் மாறியது. இது தொடா்பாக அண்மையில் ’’தினமணி’’ நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் உத்தரவிட்டாா். அதனையும் மீறி வாகனங்கள் நிறுத்துவது தொடா்கதையானது.
இந்த நிலையில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் தலைமையிலான போலீஸாா், நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஆன்லைன் மூலம் தலா ரூ.500 அபராதம் விதித்தனா். இருசக்கர வாகனங்கள் மீண்டும் நிறுத்தப்பட்டால் பாரபட்சமின்றி அவை பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.