deepseek: 'நிதி நிறுவனம் டு ஏ.ஐ' - யார் இந்த டீப் சீக் நிறுவனர் லியாங் வென்ஃபெங்?!
டீப் சீக் சாட்பாட் - ஏ.ஐ உலகத்தின் புதிய வரவு. 'எப்போது என்ன சொல்வார்... செய்வார்' என்று உலக நாடுகளை ஜெர்க்கில் வைத்திருக்கும் ட்ரம்பிற்கே இந்த வரவு ஒரு ஜெர்க்கைத் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, டீப் சீக் மிகவும் டிரெண்டில் உள்ளது. இதற்கு முன்பு அறிமுகமான ஓப்பன் ஏ.ஐ-யை விட, இதில் தகவல்கள் சற்று தெளிவாகவும், திருத்தமாகவும், எளிதாகவும் உள்ளது என்று இதன் பயனாளர்கள் டீப் சீக்கை 'ஆஹா...ஓஹோ' என்று புகழ்ந்து வருகின்றனர். டீப் சீக் நிறுவனம் 2023-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்த சாட் பாட் தான் தற்போது உலகளாவிய டிரெண்ட்.
இப்படி உலக நாடுகள் அனைத்தும் பேசும் டீப் சீக்குக்குப் பின்னால் இருக்கும் நபர் லியாங் வென்ஃபெங். இவருடைய வயது வெறும் 40 தான்.
சீனாவைச் சேர்ந்த இவர், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். 2015-ம் ஆண்டு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனமான ஹை-ஃபிளையரைத் தொடங்கினார். அங்கு தான் இவருடைய ஏ.ஐ பயணம் தொடங்கியுள்ளது.
ஹை-ஃபிளையர் நிறுவனத்தில் வணிக ஸ்ட்ரேட்டஜிகளுக்கு ஏ.ஐ பயன்படுத்த தொடங்கிய இவர், அதில் ஆர்வம் அதிகமாக 2021-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட Nvidia கிராஃபிக் பிராசஸர்களை வாங்கிச் சோதனைகள் செய்து வந்திருக்கிறார்.
அவருடன் ஹை-ஃபிளையர் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் 'இது தேவையில்லாத வேலை' என்று கமென்ட்டுகளை அடுக்க, இவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், தன்னுடைய முயற்சிகளை மட்டும் கைவிடவில்லை.
இந்த சாட் பாட்டிற்கு அமெரிக்காவில் தனி பயனாளர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ட்ரம்ப், "அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இது மாதிரியான ஏ.ஐ அறிமுகப்படுத்த வேண்டும்" என்று பேசியுள்ளார்.
பெரிய பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்களே இன்னும் ஏ.ஐ-யில் முழுவதுமாக களம் இறங்காத இந்தக் களத்தில், நிதி நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.