சிவகாசி: பஸ்ஸில் இடம்பிடிக்க தங்கநகையுடன் பையை போட்ட பெண்... எடுத்துக்கொண்டு ஓடிய மூதாட்டி..!
சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் மூதாட்டிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூப்பர் மார்க்கெட்டில் நடந்த திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் ஏற்கெனவே பெண் ஒருவரிடம் நகை திருடியதும் அம்பலமானது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/l9wwgkpx/IMG_20250206_WA0011.jpg)
அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி வள்ளலார் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்சி ராணி (வயது 37). அச்சு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 19ம் தேதி தனது தாயார் வீட்டுக்கு செல்வதற்காக சிவகாசி பேருந்து நிலையத்திற்கு கையில் பையுடன் வந்திருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்குள் பஸ் வரவும், கூட்டநெரிசலை தவிர்த்து இடம்பிடிப்பதற்காக பஸ் ஜன்னல் வழியே தான் வைத்திருந்த பையை உள்ளே தூக்கிப்போட்டு ஜான்சிராணி இடம் பிடித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர், படி வழியாக உள்ளே ஏறி சென்று பார்த்தபோது, பைக்குள் வைத்திருந்த பர்ஸ் மட்டும் மாயமாகியிருந்தது. தொடர்ந்து, பஸ் முழுவதும் தேடியும் மாயமான பர்ஸ் கிடைக்கவில்லை. மாயமான அந்த பர்ஸூக்குள், 2பவுன் தங்கநகையை ஜான்சிராணி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/l7pyukan/IMG_20250206_WA0009.jpg)
தொடர்ந்து இதுதொடர்பாக, சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு, சிவகாசியில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கையும் களவுமாக மூன்று பெண்களை பிடித்து வந்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் (வயது 55), ராக்கம்மாள் (60), திருமங்கலம் கொக்குளம் சுடுகாட்டுத்தெருவைச் சேர்ந்த தேடா செல்வம் (60) ஆகியோர் என தெரியவந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/ng80vyrs/IMG_20250206_WA0008.jpg)
போலீஸாரின் விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில், திருடியது மட்டுமல்லாமல், ஜான்சிராணியிடம் நகையை திருடிச் சென்றதும் இவர்கள்தான் என தெரியவந்தது. இதையடுத்து, முத்துப்பாண்டியம்மாள், ராக்கம்மாள் மற்றும் தேடா செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்த சிவகாசி போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்." என்று தெரிவித்துள்ளனர்.