பிகார்: காவல் நிலையத்தை சூறையாடிய மக்கள்!
பிகாரில் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்ததால், காவல் துறையைக் கண்டித்து இச்சம்பவத்தில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கன்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷிவம் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினர், கிராம மக்களுடன் சேர்ந்து காவல் நிலைய வளாகத்தில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தினர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து பேசிய முசாஃபர்பூர் காவல் கண்காணிப்பாளர் சுஷில் குமார், ஆரம்பக்கட்ட விசாரணையின் முடிவில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், அதிகாலை 3 மணிக்கு சிறையில் ஷிவம் குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.
இது காவல் நிலையத்தில் நடந்த மரணம் என்பதால், தலைமைக் காவலர் உள்பட 3 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு 3 மருத்துவர்கள் குழு உள்பட தடயவியல் துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். உடற்கூராய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் கடுமையான தாக்குதலில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுஷில் குமார், உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும். உச்சநீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி விசாரணை நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பெயரை மாற்றியது சொமாட்டோ!