புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நான்கு நபர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அதில், வெற்றிவேல் (வயது: 27) என்பவர் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் விசைப்படகின் ப்ரோபோலரின் வலை சிக்கியதை கடலுக்குள் இறங்கி எடுக்கச் சென்றபோது, உள்ளே சிக்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
ஆனால், அவர் படகின் காற்றாடியில் பட்டு உயிரிழந்தது தெரியவந்ததால், இதைப் பார்த்த உறவினர்களும், சக மீனவர்களும் கதறி அழுதனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேற்கொண்டு அவரது உடல் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுவதற்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீனவர் ஒருவர் படகின் காற்றாடியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.