குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்ப...
சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய அதிகாரிகள் கண்காணித்தனா்.
அப்போது, சுங்கத்துறை மோப்ப நாய், சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரின் உடமையை மோப்பம் பிடித்து, போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்ததுடன் அதே இடத்தில் தரையில் அமர்ந்து கால் நகங்களால், தரையை கீரி சைகை காட்டியது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்த போது, அதனுள் இருந்த 3 பார்சல்களில், பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக சுங்க அதிகாரிகள் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.
இதையும் படிக்க |முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அந்த பயணியிடம் விசாரணை நடத்திய போது, இவர் கஞ்சா கடத்தலுக்காக கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாங்காக் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். இவரை பாங்காக் அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கஞ்சாவை வாங்கிக் கொண்டு, கடத்தல் வேலைக்காக இவருக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியிருந்தார்.
ஆனால், பயணி சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டது தெரிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய உயரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.