யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: மு.க...
கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு' கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..!
தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘மான்செஸ்டர்’ மாவட்டத்தில் பிரமாண்ட பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளைச் சமீபத்தில் ஆய்வு செய்திருக்கிறார் துறைக்குப் பொறுப்பான ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர். அப்போது கட்டுமானப் பொருள்கள் குறித்து விசாரித்தவர், பயங்கர டென்ஷனாகிவிட்டாராம். அதாவது, மான்செஸ்டர் மாவட்டத்தில் கட்டப்படும் பூங்காவுக்கு அண்டை மாவட்டத்திலிருந்துதான் எல்லாப் பொருள்களுமே வருகிறதாம். இதன் பின்னணியில் ‘ஷாக்’ அமைச்சர் இருப்பதை அறிந்துகொண்ட ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர், ‘ஏன், கட்டுமானப் பொருள்கள்கூட இந்த மாவட்டத்தில் கிடைக்காதா..?’ என்று அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரரிடமும் கத்தியிருக்கிறார். பதிலுக்கு, ‘பொறுப்பு அமைச்சர் உத்தரவின்படி, அவர் ஊரிலிருந்துதான் எல்லாம் வருகின்றன’ எனக் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். என்ன சொல்வதென்று தெரியாமல், ‘எல்லாம் நேரம்...’ என்று தலையில் அடித்துக்கொண்டாராம் ‘ஜோதி’ மாவட்ட அமைச்சர்!
கடைகோடி மாவட்டத்திலிருக்கும் இலைக்கட்சி எம்.எல்.ஏ, கடுமையான மனவருத்ததில் இருக்கிறாராம். 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, தனக்கு நெருங்கிய வட்டாரங்களுடன் அவர் நடத்திய ஆலோசனையில், ‘பூ கட்சியுடன் கூட்டணி சேரவில்லை என்றால், எங்கு நின்றாலும் தோற்கத்தான் போகிறீர்கள்...’ என்றிருக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
தலைமையைப் பகைத்துக்கொண்டு ‘பூ’ கட்சியுடன் நட்பு பாராட்டியதால்தான், அவரது பதவியே பறிபோனது. நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் மீண்டும் பொறுப்பைப் பெற்றார். இந்தச் சூழலில், ‘பூ கட்சியையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது, கூட்டணி சேரவும் வாய்ப்பில்லை. இனி எப்படி வெற்றிபெறுவது... எந்தத் தொகுதியில் போட்டியிடுவது’ எனச் செய்வதறியாமல் புலம்பித் தவிக்கிறாராம் அந்த எம்.எல்.ஏ!
‘அவார்டு’ மாவட்ட ‘கூரான’ கதர் பிரமுகரின் உறவினர் ஒருவர், நீண்டக்காலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்த உறவினர் பேசிவைத்த இடத்தின் உரிமையாளரை, தூங்கா நகர ‘கீர்த்தி’ தரப்பு ஆட்கள் மிரட்டி, நிலத்தை எழுதி வாங்கிவிட்டதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், கதர் பிரமுகரின் உறவினரை ‘கீர்த்தி’ தரப்பினர் தாக்கியதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது. விவகாரம் காவல்துறைக்குச் செல்லவும், ‘கீர்த்தி’ பிரமுகரே நேரடியாகத் தலையிட்டு, கதர் பிரமுகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ‘அதில் சமாதானம் அடைந்ததுபோல கதர் பிரமுகர் வெளியே காட்டிக்கொண்டாலும், கீர்த்தியாரை வேறு வகையில் பழி தீர்க்கக் காத்திருக்கிறார்...’ என்கிறார்கள் விவரப் புள்ளிகள்!
2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, பல சமூக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறதாம் இலைக் கட்சித் தலைமை. குறிப்பாக, தென்மாவட்டத்திலுள்ள சமூக அமைப்புகளிடம், அதே சமூகத்தைச் சேர்ந்த தங்களது கட்சி நிர்வாகிகளை நேரடியாக அனுப்பிப் பேசவைக்கிறதாம் தலைமை. இந்த விவகாரத்தை உளவுத்துறை மூலமாக ‘நோட்’ செய்த ஆட்சி மேலிடம், தங்கள் தரப்பினரையும் கோதாவில் இறக்கிவிட்டிருப்பதாகத் தகவல். ஆனால், பேச்சுவார்த்தைக்குச் செல்லும் ஆளுந்தரப்பினர், சுமூகமாகப் பேசாமல்... சில தடித்த வார்த்தைகளை விடுவதால்... பேச்சுவார்த்தை ரணகளமாகி வருவதாகத் தகவல். இரு பெரும் கழகங்களும் தங்கள் வாசல் தேடி வந்து நிற்பதால், தங்கள் கிராக்கியை ஏகத்துக்கும் ஏற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனவாம் சமுக அமைப்புகள்!
தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கில், தலைநகர் காக்கிகளால் தேடப்பட்டு வரும் பிரபல ரெளடி, கம்போடியாவில் பதுங்கியிருக்கிறாராம். அங்குள்ள போதைமருந்து கடத்தல் மாஃபியாக்களின் பாதுகாப்பில், அந்த ரெளடி சகல வசதிகளுடனும் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது காக்கிகள் வட்டாரம். விரைவிலேயே அவருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸை அளித்து, இன்டெர்போல் மூலமாக வளைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதற்கான கோப்புகளை டெல்லிக்கு அனுப்பத் தீவிரமாகிறார்கள் தலைநகர் காக்கிகள்!