கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!
`முருகன் மலையை காப்பாற்றும் போராட்டம்; திமுக அரசுக்கு முதல் அடி விழுந்துள்ளது'- இந்து முன்னணி தலைவர்
திருப்பூரில் நேற்று முன்தினம் காலை கைதுசெய்யப்பட்டதால், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு இரவு 8 மணிக்கு மேல்தான் மதுரை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "இந்து முன்னணியின் சார்பில் பல்வேறு சமூக தலைவர்கள், முருக பக்தர்கள் என பலருக்கும் திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
மதுரை காவல்துறை, மாவட்ட ஆட்சியரிடம் அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது. தமிழக அரசு பல்வேறு இடையூறுகளைச் செய்தது. பல இடங்களில் காவி நிறத்தில் உடை அணிந்திருந்தவர்களை, கையில் கயிறு கட்டியவர்களை காவல்துறை கைதுசெய்துள்ளது. முன்பு கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலும் காவி ஆடை அணிந்தவர்கள் கைதுசெய்யப்பட்ட மோசமான நிலை இருந்தது. தமிழக அரசின் பல்வேறு தடைகளையெல்லாம் தாண்டி இந்து முன்னணியின் அறப்போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் ஆர்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுகினோம். சரியான தீர்ப்பை கொடுத்த நீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முருகன் மலையை காப்பாற்ற நடந்த முதற்கட்ட போராட்டத்தால், இந்த அரசுக்கு முதல் அடி விழுந்துள்ளது.
வரும் காலங்களில் இந்த அரசு திருந்த வேண்டும், இல்லையென்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முருகப்பெருமான் பாதிப்பை ஏற்படுத்துவார். இந்துக்களுக்கு எதிராக உள்ள திமுக அரசு, நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் அறவழிப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறை, திருப்பரங்குன்றம் மலை மீது நவாஸ்கனி, அப்துல்சமது ஆகியோர் பிரியாணி சாப்பிட அனுமதி அளித்தது.
சிக்கந்தருக்கு திருப்பரங்குன்றம் மலை மீது எந்த உரிமையும் இல்லை என்ற கருத்தும் உள்ளது. புனிதமான மலையில் ஆடு, கோழி வெட்டுவது ஏற்புடையதல்ல. அடுத்ததாக திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அழுத்தம் கொடுப்போம். திமுக அரசை வெளியேற்ற நாங்கள் தொடர்ச்சியாக அறப்போராட்டத்தை நடத்துவோம்.
அறப்போராட்டத்தில் மக்கள் தன்னெழுச்சியாக கூடியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்தார்.