மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போ...
கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!
வனங்களும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் காய்கறி , இறைச்சி உள்ளிட்ட உணவு கழிவுகளால் ஈர்க்கப்படும் கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. தங்களுக்கான உணவுகளை குப்பை குவியல்களில் தேடி அலையும் அவலம் ஏற்படுகிறது.
இதனால் வனவிலங்குகளுக்கு கடுமையான நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதுடன் மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் ஏற்படும் அபாயமும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் உணவு கழிவுகளால் அவற்றை உண்ணும் கரடிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கோத்தகிரி அருகில் உள்ள கக்குச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பை குவியல்களுக்கு மத்தியில் கரடி ஒன்று உணவு தேடி அலையும் படங்கள் வெளியாகி அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
இது குறித்து தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், "கரடிகளைப் பொறுத்தவரை தங்களுக்கான உணவுகளை நுகரும் திறன் அடிப்படையிலும் தேடிக் கொள்கின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உணவு கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாத காரணத்தால் பழங்கள், காய்கறிகள் போன்ற கழிவுகளால் ஈர்க்கப்படும் கரடிகள் அவற்றை தேடி குப்பை குவியல்களில் அலைகின்றன.
இது போன்ற மனித தவறுகளால் அவற்றின் ரோமங்கள் முதல் உணவு மண்டலங்கள் வரை பல்வேறு நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படும். மேலும், மனித வனவிலங்கு எதிர்கொள்ளலும் ஏற்படுகின்றன. இதனை சாதாரணமாக கழிவு மேலாண்மை என்று கடந்து விட முடியாது. வனவிலங்கு பாதுகாப்பின் ஒரு அங்கமாகவே கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற அவலங்களை தடுக்க முடியும்" என்றனர்.