பந்திப்பூர்: காய்கறி லாரிகள் மட்டும் டார்கெட்; தெறிக்கும் ஓட்டுநர்கள், திணறும் வனத்துறை
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன முதுமலை முச்சந்திப்பு வனப்பகுதிகள். தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய புலிகள் காப்பகங்கள், கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் எனப் பரந்து விரிந்து காணப்படும் இந்த பகுதியே பல்வேறு உயிரினங்களின் கடைசிப் புகலிடமாகவும் விளங்குகிறது.
அடர்ந்த வனத்தைக் கொண்டிருக்கும் இந்த பகுதிகளின் ஊடாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் வனவிலங்குகளின் மீது பெரிய அளவிலான பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டாலும் பகல் வேளைகளில் நிலவும் அளவுக்கு அதிகமான போக்குவரத்து வனவிலங்கு பாதுகாப்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பக சாலையோர பகுதியில் கடந்த சில நாட்களாக நடமாடி வரும் ஆண் யானை ஒன்று சரக்கு வாகனங்களை வழிமறித்து காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. வாகனத்தை எதிர்பார்த்து சாலையின் குறுக்கே நிற்கும் அந்த ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் மனித எதிர்கொள்ளல்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த யானை குறித்துத் தெரிவித்த கூடலூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள், "முதுமலை தொடங்கி பந்திப்பூர் முடியும் வரை பல இடங்களில் யானைகளைக் காண முடியும். ஆனால் பெரும்பாலான யானைகள் வாகனங்களைத் தவிர்த்துச் சென்று விடும். மிகவும் அரிதாக ஒரு சில யானைகள் மட்டுமே வாகனங்களை வழிமறிக்கும். கடந்த ஒரு மாதமாகவே இந்த பகுதியில் நடமாடும் இந்த யானை, காய்கறி லாரிகளை மட்டுமே வழிமறிக்கிறது. உள்ளே என்ன இருக்கிறது என்பதை மோப்ப சக்தி மூலம் தெரிந்து கொண்டு தார்ப்பாலினைப் பிரித்து மூட்டைகளைக் கீழே தள்ளி கேரட், தக்காளி, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்கிறது. அதை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும்" என்றனர்.
இது குறித்துத் தெரிவித்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்துறையினர், "சாலையோரமே நடமாடிப் பழகிய இந்த ஆண் யானை படிப்படியாக வாகனங்களை வழிமறிக்கப் பழகி இருக்கிறது. தற்பொழுது வாகனங்களில் கிடைக்கும் சுவையான காய்கறிகள் மற்றும் பழங்களுக்குப் பழகி இருக்கிறது.
பலமுறை விரட்டினாலும் தொடர்ந்து சாலையோர பகுதிக்கு வருகிறது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் நடந்து வனப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் இந்த யானைக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதோ உணவு அளிப்பதோ கூடாது. சட்டப்படி குற்றச்செயல் என்பதால் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs