குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காது
''நீரோடையில் ஒரு யானைக்குடும்பம் நீர் அருந்திக்கொண்டிருந்தது. யானைகளை, யானைக்கூட்டம் என்று சொல்லக்கூடாது. 'யானைக்குடும்பம்' என்பதுதான் சரியான வார்த்தை. நீர் அருந்திவிட்டு மேலேறும்போது அந்தக் குடும்பத்திலிருந்த மூத்த தாய் யானை அப்படியே சரிந்து விழுந்து இறந்தது. உறவின் அடிப்படையில் பார்த்தால், மூத்த தாய் யானை என்பது ஒரு யானை குடும்பத்தின் பாட்டி என்றும் சொல்லலாம். மற்ற யானைகளுக்கு தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் இறந்துவிட்டார் என்பது தெரிந்துவிட்டது. தங்களுடைய தாயை சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்தன. காட்டுக்குள் யானையொன்று இறந்துகிடப்பதை அறிந்து, வனத்துறையினரும் மருத்துவரும் வந்து உடற்கூராய்வு செய்யும் நேரத்தில் மற்ற யானைகள் அனைத்தும் ஆங்காங்கே மரங்களின் பின்னால் நின்றுகொண்டிருந்தன. அந்த நேரத்தில் எந்த யானையும் எதையும் மேயவில்லை. அதாவது உணவு எடுத்துக் கொள்ளவில்லை. எல்லாம் முடிந்து அந்த பாட்டி யானையைப் புதைத்த நேரத்தில் மொத்த யானைக்குடும்பமும் ஒரே நேரத்தில் பிளிறியது, அந்ந பிளிறல் ஒப்பாரி வைப்பதைப்போலவே இருந்தது. பாட்டி யானை மண்ணுக்குள் சென்றதும் அந்த யானைக்குடும்பம் அந்த நீரோடையில முங்கிக் குளித்துவிட்டு அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றன. கிட்டத்தட்ட, நம் குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்தால் எப்படி நாம் குளிப்போமோ அதைப்போலவே இருந்தது அந்த யானைக்குடும்பத்தின் செயல்..!'' - சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'ஆதியில் யானைகள் இருந்தன' புத்தகத்தின் ஆசிரியருமான கோவை சதாசிவம், ஒரு யானைக்குடும்பத்தின் மூத்த பாட்டி இறந்ததையும், அதன் இறப்பையொட்டி அதன் குடும்ப உறுப்பினர்கள் எப்படி துக்கம் கடைபிடித்தன என்பதையும் தான் பார்க்க நேரிட்டதை இப்படி விவரிக்கிறார்.

''உறவுகளைப் பேணுவதில், மனிதர்களுக்கே பாடம் எடுப்பவை யானைகள். யானைகள் தாய் வழிச் சமூகத்தைப் பின்பற்றுபவை. யானைக் குடும்பத்துக்குத் தலைவிதான். தலைவன் கிடையாது. குடும்பத்தில் மூத்த பாட்டி யானைதான் அந்தத் தலைவி. அதுதான், உணவு தேடியும் நீர் நிலைகளைத் தேடியும் தன் குடும்பத்தை வழி நடத்தும். வெயில் காலத்திலும் எந்த நீர் நிலைகளில் நீர் இருக்கும் என்பது இந்தப் பாட்டி யானைக்குத்தான் தெரியும். யானைக் குடும்பங்களை உற்று கவனித்தால், அதில் ஆண் யானைக்கன்றுகள், அதாவது குட்டி ஆண் யானைகள் இருக்கும். ஆனால், வளர்ந்த ஆண் யானைகள் இருக்காது. அவை இனப்பெருக்க காலத்துக்கு வந்தவுடனே, அவற்றை குடும்பத்தை விட்டு வெளியேற்றி விடும் மூத்த பெண் யானை. தன் குடும்பத்தில் இருக்கிற சகோதர முறைகொண்ட பெண் யானைகளுடன் அவை உறவுகொண்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படியொரு முடிவை எடுக்கும் மூத்த யானை. இன்னமும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், இனப்பெருக்க பருவத்தில் இருக்கிற ஆணும், பெண்ணும் அருகருகே உரசியபடி நடந்து வருவதைக்கூட மூத்த யானை அனுமதிக்காது. அதே நேரம், ஆண் யானையைக் குடும்பத்தைவிட்டு வெளியேற்றுகிறது என்பதற்கு அர்த்தம், அந்த ஆண் யானை தன் குடும்பத்தை விட்டு மொத்தமாக சென்றுவிடும் என்பதல்ல. குடும்பத்தை விட்டு சற்று தூரத்தில் இருக்கும், அவ்வளவுதான். இனப்பெருக்கக் காலத்தில், தனித்திருக்கும் இந்த ஆண் யானையுடன் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் யானை சேரும்.
இந்தளவுக்கு பாட்டி யானை கட்டுப்பாடாக இருப்பதற்கு சகோதர உறவுக்குள் இனப்பெருக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பது மட்டுமே காரணமல்ல... ஒரே குடும்பத்துக்குள் இனவிருத்தி செய்தால், அடுத்த தலைமுறை யானைக்கன்றுகள் ஆரோக்கியமாக இருக்காது என்பதும்தான். தங்களுடைய மரபணுக்களை வீரியமாக வைத்துக்கொள்வதற்காக, வேறொரு யானைக்குடும்பத்தில் இருந்துதான் ஆண் யானையைத் தேர்ந்தெடுக்கும் பெண் யானைகள். தாய்மாமன்களுக்குக்கூட தங்களுடைய பெண்ணை கொடுக்காது யானைக்குடும்பங்கள்.

ஒரு யானைக்குடும்பம் வலசை சென்றுகொண்டிருக்கும்போது, அந்தக் குடும்பத்திலிருக்கிற பெண் யானைக்கு மதநீர் வடிய ஆரம்பித்தால் அது தன் குடும்பத்தைவிட்டு பின்தங்கி விடும். குடும்பத்தின் மூத்த யானைக்கு, தன்னுடைய மகளோ அல்லது பேத்தியோ துணை தேடி பின் தங்கிவிட்டாள் என்பது புரிந்துவிடும். பெண் யானையின் மதநீர் வாசனையை நுகர்ந்து அதனைத் தேடி ஆண் யானை வரும். சில நேரம், எங்கோ தனித்து நிற்கிற ஆண் யானையின் மதநீர் வாசனையை அறிந்தும் தன் குடும்பத்தை விட்டு பெண் யானை பின் தங்கி நிற்கும். தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி ஆண் யானைக்காக காத்திருக்கிறாள் என்பது தெரிந்ததும், மூத்த யானை மற்ற யானைகளை மெதுவாக வழிநடத்திச் செல்ல ஆரம்பிக்கும். துணை தேடி நின்ற யானைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் யானைக்குடும்பம் நின்றுக்கொண்டிருக்கும். உறவு முடிந்து அந்தப் பெண் யானை மறுபடியும் தன் குடும்பத்துடன் வந்து சேர இரண்டு அல்லது மூன்று நாள்கள்கூட ஆகலாம். அதுவரைக்கும் அந்த யானைக்குடும்பம் சற்று தொலைவிலேயே இருக்கும். உறவு முடிந்த பிறகு, தன் குடும்பத்தின் வாசனை வரும் திசை நோக்கி அந்தப் பெண் யானை நடக்க ஆரம்பிக்கும். தங்கள் மகள் வந்து சேர்ந்ததும், யானைக் குடும்பம் மறுபடியும் வலசை செல்ல ஆரம்பிக்கும். அதன்பிறகு, இந்தப் பெண் யானைக்கும், உறவுகொண்டு சென்ற ஆண் யானைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
பாட்டி, தாய், மகள், சித்தி, அத்தை என்று ஒரு யானைக்குடும்பத்தில் இத்தனை பெண் உறவுகள் இருக்கிறதே... அப்படியென்றால், தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஆண் யானையுடன் (களிறு) சேரும் பெண் யானையை மருமகளாக சேர்த்துக்கொள்ளுமா என்றால், கிடையவே கிடையாது. யானைகள் தாய் வழி சமூகத்தைப் பின்பற்றுபவை. ஆண் யானைகள் வழியாக வருகிற எந்த உறவையும் அவை தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளாது.

ஒரு ஜோடி இணை சேரும்போது அவற்றின் அருகே வேறு யானைகள் வராது. ஒருவேளை பெண் யானையின் மதநீர் வாசத்தில் வேறொரு ஆண் யானை வந்துவிட்டால், இரண்டு ஆண் யானைகளுக்கும் இடையே கடுமையான சண்டை வந்துவிடும். சண்டையில் வெற்றிபெற்ற ஆண்தான் பெண் யானையுடன் உறவுகொள்ளும். இதன் விளைவாக பிடி (பெண் யானை) கருத்தரித்து யானைக்கன்றை ஈனும்போது, குடும்பத்தில் இருக்கிற அத்தனை பெண் யானைகளும் பிரசவத்துக்கு உதவி செய்யும். பிரசவ வேதனையுடன் இருக்கும் பெண் யானையின் வயிற்றை மற்ற பெண் யானைகள் தடவிக்கொடுக்கும். கும்பகோணம் கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்தேன். அந்த சிற்பத்தில், பெண் யானையின் உறுப்பில் பாதி குட்டி வெளியே வந்திருக்கும். மற்ற பெண் யானைகள் அதன் வயிற்றைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கும். குட்டி யானைகள் பிறக்கவிருக்கிற தன்னுடைய தம்பியையோ, தங்கையையோ ஆவலோடு எதிர்பார்த்து அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்கும். நிஜத்திலும் இப்படித்தான் ஒரு யானையின் பிரசவம் நிகழும். குடும்பத்தில் இருக்கிற சித்தி, அக்கா உறவுமுறை கொண்ட யானைகள் வயிற்றைத்தடவிக்கொடுத்து, தும்பிக்கையுடன் தும்பிக்கை இணைத்து என பிரசவ வேதனையில் இருக்கிற யானையை ஆறுதல்படுத்தும்.
குட்டி ஈன்றதும், பெண் யானை ஒருநாளைக்கு 12 லிட்டர் வரைக்கும் தாய்ப்பால் சுரக்கும். ஆறு மாதம் வரைக்கும் யானைக்கன்று தாய்ப்பால் மட்டுமே குடிக்கும். அதன்பிறகுதான் செரிமானம் செய்ய உதவும் நொதிக்கான உறுப்புகள் வளர ஆரம்பிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகும் யானைக்கன்றுகள் புல் மேய ஆரம்பிக்காது. பதிலாக, பாட்டி, அம்மா, அத்தை, சித்தி யானைகள் போடுகிற சாணத்தை சாப்பிட ஆரம்பிக்கும். யானைகளின் வயிற்றில் ஐம்பது சதவிகிதம் மட்டுமே செரிமானம் நிகழும். அதன் சாணத்தைச் சாப்பிடும்போது குட்டி யானைகளுக்கு உணவும் கிடைத்துவிடும். செரிமானத்துக்கான நொதியும் கிடைத்துவிடும். இதன்பிறகுதான் அந்தக் குட்டிகள் புல், இலை, தழை, பழம், காய்ந்த குச்சிகள், மரப்பட்டை, மூங்கில் என மேயத்தொடங்கும். கால்சியம் சத்துக்காக கொஞ்சம் மண்ணும் சாப்பிடும். இப்படி சரியான உணவுப்பழக்கத்துக்கு வருவதற்கு குட்டி யானைக்கு எட்டு மாதம் பிடிக்கும். நாம் ரீல்ஸ்களில் பார்ப்பதுபோல குட்டி யானைகள் சேட்டை பிடித்தவைதான். எது கிடைத்தாலும் எடுத்து விளையாடும். சமீபத்தில்கூட, ஒரு குட்டி யானை பீர் பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அது குழந்தை என்றாலும், பாட்டில் உணவுப்பொருள் கிடையாது என்பது அதற்கு நன்கு தெரியும். ஆனால், எதிர்பாராவிதமாக அந்தப் பாட்டில் உடைந்து தும்பிக்கையில் காயம்பட்டாலோ அல்லது பாட்டிலை விழுங்கிவிட்டாலோ அதன் விளைவை சொல்வதற்கே மனது பதறுகிறது.

பாட்டி யானை இறப்பதற்கு முன்னால், தன் குடும்பம் வலசை செல்ல வேண்டிய பாதைகள், அந்தக் காட்டில் எங்கெங்கு நீரோடைகள் இருக்கும், எந்த நீரோடையில் கோடையிலும் நீர் இருக்கும், காட்டுக்குள் எங்கே என்னென்ன உணவுக் கிடைக்கும், எந்தெந்த காலத்தில் காட்டின் எந்தப்பகுதியில் இருக்க வேண்டும் என்பதுவரை தன்னுடைய மூத்த மகளுக்குக் கற்றுக்கொடுத்து விடும்.
கோயில்களில் பெண் யானைகளை வளர்ப்பதற்குப் பின்னால், ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது என்கிற தவறான நம்பிக்கையொன்று இருக்கிறது. ஆனால், இனப்பெருக்கக்காலத்தில் ஆணைப்போலவே பெண் யானைக்கும் மதம் பிடிக்கும். யானைகளின் வாழ்க்கையில் இயல்பான விஷயமிது. மதம் பிடித்தால், அந்த யானை கருவுறுதலுக்கான ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றே அர்த்தம். அதுபுரியாத மனிதர்கள், அதன் கால்களில் சங்கிலியைக் கட்டி சித்ரவதை செய்கிறார்கள். இயற்கையான சூழல், இனச்சேர்க்கை என புத்துணர்வு முகாம் இதற்கொரு தீர்வுபோல தெரிந்தாலும், 'அங்கே கட்டிப்போடுவோம்; இங்கே சுதந்திரமாக இருக்க விடுவோம்' என்பது அந்த பேருயிர்களுக்கு நாம் செய்யும் அநீதி தான்.

கோயில்களில் இருக்கிற யானைகளுக்கும் தன்னுடைய காட்டின் நினைவுகள் இருக்கும். 'எனக்குக் கிடைக்காததெல்லாம் என் பிள்ளைக்குக் கிடைக்கணும்' என்று மனிதர்கள் நினைப்பதுபோலவே யானைகளும் நினைக்கும். ஒரு கோயில் யானை கர்ப்பமாக இருந்தால், தன் கன்று அகன்ற காட்டில் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றே விரும்பும். யானைகளில், கோயில் யானை என்று எதுவுமில்லை. காடுதான் யானைகளுக்குக் கோயில்'' என்கிறார் சதாசிவம்.
உண்மைதானே..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs