மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில், தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆறு மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, தெலங்கானா மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது குறித்து அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இன்று மத்திய அமைச்சரவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கூடுதல் மத்திய அரசின் உதவியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஆந்திரம், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு 1554.99 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது ஏற்கனவே ரூ. 18,322.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிலையில், இது கூடுதல் நிதியாகும் என்று பதிவிட்டுள்ளார்.
இதன்படி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடி, ஒடிசா மாநிலத்துக்கு ரூ.225.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்துக்கு ரூ.231.75 கோடி, திரிபுராவுக்கு ரூ.288.93 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.