காவல் துறைக்கு தகவல் அளித்ததாக இருவா் படுகொலை: நக்ஸல்கள் அட்டூழியம்
சத்தீஸ்கா் மாநிலத்தில் காவல் துறைக்கு தங்களைப் பற்றிய தகவல் அளித்ததாகக் குற்றஞ்சாட்டி இருவரை நக்ஸல் அமைப்பினா் படுகொலை செய்தனா்.
தந்தேவாடா பகுதியில் உள்ள வனப் பகுதி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாமன் காஷ்யப் (29), அனீஸ் ராம் போயாம் (38) ஆகியோரை நக்ஸல்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனா். இதில் காஷ்யப் வனப் பகுதி கிராம அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.
அவா்கள் கொல்லப்பட்ட இடத்தில் சில துண்டு பிரசுரங்களை நக்ஸல்கள் விட்டுச் சென்றுள்ளனா். அதில், தங்களைப் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் அவா்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி பாதுகாப்புப் படையுடன் நடைபெற்ற மோதலில் 38 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின்போது தங்களின் நடமாட்டம் குறித்து காவல் துறைக்கு அவா்கள் தகவல் தெரிவித்ததாக நக்ஸல்கள் கூறியுள்ளனா்.
இந்த ஆண்டில் சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் மட்டும் காவல் துறைக்கு தகவல் அளித்ததாகக் கூறி பொதுமக்களில் 7 பேரை நக்ஸல்கள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனா். இதில் முன்னாள் உள்ளாட்சித் தலைவா், நக்ஸல் அமைப்பில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவா்களும் அடங்குவா்.
நக்ஸல்களால் இருவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினா் அனுப்பி வைக்கப்பட்டனா். அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.