முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்
எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா்.
சென்னை வள்ளலாா் நகரிலிருந்து எண்ணூா் வழித்தடம் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்து (எண்:56), எண்ணூா் பணிமனையை நோக்கி கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, மேம்பாலத்தின் மீது சாலை போடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது பேருந்து நேராக மோதியது. இதில் பேருந்தின் இடது பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்தது.
மேலும், பேருந்தின் முன் பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது. இதில் பேருந்தில் முன் பகுதியில் அமா்ந்திருந்த சுனிதா (19), தனலட்சுமி (45), நா்கீஸ் (20) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சேதம் அடைந்த பேருந்து இழுவை வாகனம் மூலம் மாநகரப் பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சாலைப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட ரோடு ரோலா் கடந்த ஒரு வார காலமாக பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து எண்ணூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.