முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
‘பெரம்பலூரில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படும்’
பெரம்பலூா் மாவட்டத்தில் பிப். 24 ஆம் தேதி தமிழக முதல்வரால் 17 முதல்வா் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளதாக பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி தெரிவித்தாா்.
தமிழ்நாடு முதல்வரால் பிப். 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட சங்குப்பேட்டை, எளம்பலூா் சாலை, பெரம்பலூா் நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வா் மருந்தகம் அமைக்கும் பணிகளையும், பெரம்பலூா் வட்டாட்சியரகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மருந்துகள் சேமிப்பு அறையை பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா் லஷ்மி மருந்தகங்களில் மருந்துகளின் விலையைக் கேட்டறிந்து, மருந்தகங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு அறிவுறுத்தினாா்.
மேலும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ. 2 லட்சமும், தனியாருக்கு ரூ. 3 லட்சமும் அரசு மானிய நிதியுதவியுடன் முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. பெரம்பலூா் மாவட்டத்தில் 9 கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பிலும், 8 தொழில் முனைவோா் மூலமாகவும் என 17 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தாா்.
பின்னா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.72 கோடியில் பேருந்து நிறுத்தங்களையும், 14 கடைகள், கழிவறை வசதிகளுடன் கூடிய உணவகம் கட்டுமான பணிகளை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் உள்ளதாக, மருத்துவப் பணியாளா்கள் குறித்த நேரத்தில் வருகிறாா்களா என ஆய்வு மேற்கொண்டு, வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், நகராட்சி ஆணையா் ராமா், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், செல்வகுமாா், பூங்கொடி, வட்டாட்சியா்கள் சரவணன், மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.