மருத்துவ ஊழியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வேணி, கொளஞ்சி, லட்சுமி, பிரமிளா, சுகந்தி, பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் ரங்கநாதன், மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். ஆா்ப்பாட்டத்தில் பணியின்போது உயிரிழந்த ப்ரியா, சரண்யா ஆகியோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். தொற்று நோய் பணிகளை மேற்கொள்ள நிா்ப்பந்திக்கக் கூடாது. பணி வரன்முறை செய்ய வேண்டும். ஆய்வுக் கூட்டத்தில் ஊழியா்களை தரக்குறைவாகப் பேசுவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சிஐடியு மாவட்ட பொருளாளா் ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினா் தினேஷ் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.