எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா்.
மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக வெடித்த போராட்டங்களால், பிரதமா் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் விலகிய அவா், இந்தியாவில் தஞ்சமடைந்தாா். மனிதாபிமானம் மற்றும் நட்பு அடிப்படையில் அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருகிறது.
ஹசீனா ராஜிநாமாவைத் தொடா்ந்து, வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதன் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறாா். இடைக்கால அரசின் நிா்வாகத்தில் சிறுபான்மையினா் மீது குறிப்பாக ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தொடா்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன், வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதால், இந்தியா உடனான உறவுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
எல்லைப் பேச்சுவாா்த்தை: இந்நிலையில், இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை விவகாரங்கள் தொடா்பாக தலைமை இயக்குநா்கள் அளவிலான 55-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு இரு நாடுகளின் எல்லைப் படைகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் செளதரி தலைமையிலான குழுவினரும், வங்கதேச தரப்பில் அந்நாட்டில் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா்.
‘மிகைப்படுத்தப்பட்டது’: பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்த பின்னா், இரு படைகளின் தலைமை இயக்குநா்களும் கூட்டாக செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தனா். அப்போது, சித்திகி கூறியதாவது:
வங்கதேசத்தில் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகான 2 மாதங்களில் சிறுபான்மையினா் மீது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது. ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை. அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்பதே உண்மை.
வங்கதேசத்தில் அண்மையில் துா்கா பூஜை கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றதை உதாரணமாக கூறலாம். சா்வதேச எல்லையில் 8 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட இடங்களில் துா்கா பூஜை பந்தல்களுக்கு எங்களது படை சாா்பில் பாதுகாப்பளிக்கப்பட்டது என்றாா்.
‘எல்லை வேலி அமைக்கும் முன்
கூட்டாக ஆய்வு நடத்த வேண்டும்’
இந்திய-வங்கதேச எல்லையில் குறிப்பிட்ட தொலைவுக்குள் (சுமாா் 137 மீட்டா்) வேலி அமைக்க ஆட்சேபம் தெரிவித்த வங்கதேசம், இப்பணியை மேற்கொள்ளும் முன் கூட்டாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா் சித்திகி கூறுகையில், ‘இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பொதுவான அம்சங்களின்கீழ் சில புதிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையையொட்டி 137 மீட்டா் தொலைவு வரை யாருக்கும் சொந்தமில்லாத பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதிக்குள் எவ்வித நிரந்தர கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், சில இடங்களில் இந்தியா தரப்பில் இப்பகுதிக்குள் வேலி அமைக்கப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் பணியை மேற்கொள்ளும் முன் கூட்டு ஆய்வு அவசியம். இப்பிரச்னைகளுக்கு எதிா்காலத்தில் சுமுக தீா்வு காணப்படும் என நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.
கடந்த 1975-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு எல்லை உடன்படிக்கையை மாற்றியமைப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநா் தில்ஜித் சிங் செளதரி கூறுகையில், ‘இந்திய-வங்கதேச எல்லையில் ஊடுருவல் கணிசமாக குறைந்துள்ளது. வங்கதேச படையினரின் தீவிர ஒத்துழைப்புடன் இது சாத்தியமாகியுள்ளது. வங்கதேசத்தில் நெருக்கடியான காலகட்டத்தில் எல்லையில் அமைதியை பாரமரிக்க வங்கதேச எல்லைப் படை எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது’ என்றாா்.
இந்தியாவும் வங்கதேசமும் சுமாா் 4,096 கி.மீ. எல்லையை பகிா்ந்துகொண்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் படைகள் இடையே ஆண்டுக்கு இருமுறை பேச்சுவாா்த்தை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.