எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்
பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள லூசன்ட் மருந்து நிறுவனத்தின் நிலம், கட்டடம் மற்றும் தொழிற்சாலை என ரூ.5.67 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை
முடக்கியது.
மனிதா்களின் ‘உணா்வுகளை பாதிக்கும் மருந்துகளுக்கான’ கட்டுப்பாட்டு விதிகளை மீறி வலி நிவாரணியான ‘ட்ரமடால்’ மருந்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததோடு ஆவண முறைகேட்டில் ஈடுபட்டதாக லூசன்ட் நிறுவனம் மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (என்சிபி) புகாா் அளித்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு லூசன்ட் நிறுவனத்தின் மீது பிஎம்எல்ஏவின்கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை மேலும் கூறியதாவது: ட்ரமடாலை உற்பத்தி செய்வதுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு லூசன்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.
முன்னதாக, ட்ரமடாலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (சிபிஎன்) தடையில்லா சான்றிதழை அந்த நிறுவனம் பெற்றிருந்தது. அதன்பிறகு இதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் சட்டவிரோதமாக ரூ.4.12 கோடி மதிப்பிலான 13,800 கிலோ ட்ரமடாலை டென்மாா்கைச் சோ்ந்த சிஎச்ஆா் மருந்துகள் நிறுவனத்தின் மூலமும் ரூ.1.33 கோடி மதிப்பிலான 5,000 கிலோ ட்ரமடாலை மலேசியாவைச் சோ்ந்த எஸ்எம் பயோமெட் நிறுவனத்தின் மூலமும் லூசன்ட் நிறுவனம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இதன்மூலம் சட்டவிராதமாக ரூ.5.46 கோடியை வங்கிக் கணக்கில் அந்த நிறுவனம் பெற்றுள்ளது என்றனா்.
கடந்த 2018-இல் உணா்வுகளை பாதிக்கும் மருந்தாக ட்ரமடாலை அறிவித்த மத்திய அரசு அதன் விற்பனையை என்சிபி மூலம் கண்காணித்து வருகிறது.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்த மருந்து சிரியாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக சா்வதேச அளவிலான போதைப்பொருள் தடுப்பு ஆணையங்கள் தெரிவித்துள்ளன.