ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: மத்திய வா்த்தக அமைச்சா் விளக்கம்
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளாா்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அண்மையில் ரூபாயின் மதிப்பு ரூ.87.95 என்ற அதிகபட்ச வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனை முன்வைத்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக கூறியதாவது:
பல வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகவே உள்ளது. அமெரிக்க அதிபா் தோ்தலுக்குப் பிறகு சா்வதேச அளவில் பல நாடுகளின் பணத்தின் மதிப்பு சரிந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக உள்ளது. எனவே, ரூபாய் மதிப்பு குறைவது தொடா்பாக அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மேலும், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் சரியவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. நாட்டில் தொழில் துறையின் அடுத்த கட்ட வளா்ச்சியில் இவை முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா்.