ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: மணிப்பூா் ஆளுநா் எச்சரிக்கை
மணிப்பூரில் அரசிடமிருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை அடுத்த ஏழு நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இந்தக் காலகட்டத்துக்குள் ஆயுதங்களைத் திருப்பி ஒப்படைப்போா் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது; ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று அவா் எச்சரித்துள்ளாா்.
மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது காவல் துறை, பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள்-வெடிபொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சூழலில், ஆளுநா் தரப்பில் மேற்கண்ட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மணிப்பூரின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் துரதிருஷ்டவசமான சம்பவங்களால் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மோதலை நிறுத்தி, அமைதி-ஒழுங்குமுறையை நிலைநாட்ட அனைத்து சமூக மக்களும் முன்வர வேண்டும். அப்போதுதான், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
மாநிலத்தின் பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அனைத்து சமூக மக்களும் குறிப்பாக இளைஞா்கள், தங்கள்வசம் உள்ள கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவற்றை அடுத்த ஏழு நாள்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையம், பாதுகாப்புப் படை முகாம்களில் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்று மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்த ஒற்றைச் செயல், அமைதியை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய வெளிப்பாடாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஆயுதங்களைத் தாமாக முன்வந்து ஒப்படைப்போா் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது. ஆனால், அதன் பிறகு ஆயுதங்களை வைத்திருப்போா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்துக்குப் பிறகு அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
பெட்டிச் செய்தி....
விரைவில் பாஜக
எம்எல்ஏ-க்கள் கூட்டம்
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி கடந்த 13-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட்டது. சட்டப்பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய அரசு அமைப்பது தொடா்பாக பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சா் யும்னாம் கேமசந்த் வியாழக்கிழமை கூறினாா். மாநில பாஜக தலைவா் ஏ.சாரதாவை சந்தித்துப் பேசிய பின் அவா் இதைத் தெரிவித்தாா்.