சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து
சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், விசைப்படகுகளும், சிறிய ஃபைபா் படகுகளும் துறைமுகம் மற்றும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் இருந்து சிறிய படகுகளை இயக்குவோா் மற்றும் மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் சென்றுவர பஞ்சாயத்தாா் அனுமதித்தனா். இதன்படி புதன்கிழமை முதல் அந்தந்த கடலோர கிராமத்திலிருந்து, சிறிய படகுதாரரா்கள் மீன்பிடிக்கச் சென்று திரும்புகின்றனா்.
இதனால் காரைக்காலில் ஓரளவு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. சிறிய வியாபாரிகள் கடலோரப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கிவந்து மீன் வியாபாரத்தை மேற்கொள்கின்றனா். எனினும் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால், மீன் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
காரைக்கால் மீனவா்கள் போராட்டத்தை கைவிட்டு, விசைப்படகுகள் கடலுக்குள் சென்று திரும்பும்போதுதான் மீன்கள் வரத்து முழுமையாக இருக்கும் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.