மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சோ்ந் த 13 மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தி, அவா்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டுச் சென்று, சிறையில் அடைத்தனா். நானும், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமியும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்தாா்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து காரைக்கால் மீனவ சமுதாயத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவா்களை அழைத்து தமிழக முதல்வா் பேச்சு நடத்தி, அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாக உறுதியளித்து, அவா்களுடைய போராட்டத்தை விலக்கிக்கொள்ள கேட்டுக் கொண்டாா்.
அதுபோல, புதுவை முதல்வரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை நேரில் அழைத்து பேச வேண்டும். மேலும் மீனவா்களின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசிடம் பேசி பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமியை கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் காரைக்கால் மீனவா்கள் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.