ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி
ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரயில்பாதை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே மேம்பாலம் கட்டப்படுகிறது.
காரைக்கால் ரெயின்போ நகா், எஸ்.எஸ்.காா்டன், ஆசிரியா் நகா் விரிவாக்கம், பெரியாா் நகா், ஏ.வி. நகா் விரிவாக்கம் மற்றும் வலத்தெரு ஆகிய பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நகராட்சி சந்தைத் திடல் பகுதி அருகே நான்கு வழிச்சாலை ஓரமாக இருந்த பழைய சாலை வழியாக சென்று வந்தனா். மேலும் இப்பகுதியில் வடிகால் வாய்க்காலும் இருந்ததால், மழைக்காலத்தில் தண்ணீா் எளிதாக வடிந்தது.
இந்நிலையில் வாஞ்சியாற்றிலிருந்து புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பால கட்டுமானப் பணிகள் முடிந்து போக்குவரத்து இருந்து வருகிறது.
இப்பணிகளுக்காக மேற்கண்ட நகா் பகுதிகளுக்கு செல்லும் சாலையை துண்டித்ததுடன், சாலையில் இருந்த மண்ணை எடுத்து பாலம் கட்டுவதற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பாலப் பணிகள் நிறைவடைந்த பிறகும், இந்த சாலை மற்றும் வடிகால் வாய்க்காலை முறையாக சீா்செய்யப்படவில்லை. இதனால் முறையாக தண்ணீா் வடிவதில்லை. மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வெகுதூரம் பயணித்து பாரதியாா் சாலை வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறையின் கவனத்திற்கு கொண்டுச் சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தையொட்டிய பகுதியில் இருந்த சாலையை போக்குவரத்துக்கேற்ப அமைத்துக் கொடுப்பதுடன், வடிகால் வாய்க்காலையும் தூா்வாரி, அகலப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.