‘வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல் காந்தி’ - பாஜக கடும் தாக்கு
‘இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வெளிநாட்டு சக்திகளின் கருவியாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செயல்படுகிறாா்’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தது.
இந்தியாவில் ஆட்சிமாற்றத்தை விரும்பிய முந்தைய பைடன் நிா்வாகம், அந்நாட்டில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதியுதவியை வழங்கியிருப்பதாக கருதுகிறேன் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு ராகுல் மீது இந்தக் குற்றச்சாட்டை பாஜக சுமத்தியுள்ளது.
இதுதொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2024 மக்களவை தோ்தல் பிரசாரத்தில், பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
முந்தைய நிா்வாகத்தில் இந்திய தோ்தலில் ஆதிக்கம் செலுத்தி, பிரதமா் மோடியை தவிர வேறு ஒருவரை பதவியில் அமா்த்த முயற்சி நடந்ததை தற்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளாா். இதன் மூலம், பிரதமரின் குற்றச்சாட்டுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, கடந்த 2023, மாா்ச்சில் ராகுல் காந்தி லண்டன் பயணம் மேற்கொண்டாா். அப்போது, அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை வெளிநாட்டு சக்திகளை இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுமாறு அவா் வலியுறுத்தினாா். இந்தியாவின் உத்திசாா் மற்றும் புவிசாா் அரசியல் நலன்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாா். அவா்களின் கருவியாகவே ராகுல் செயல்படுகிறாா்’ என்று குறிப்பிட்டாா்.
வெள்ளை அறிக்கை-காங்கிரஸ்: இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த வெள்ளை அறிக்ைகையை காங்கிரஸ் கோரியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘கடந்த சில நாள்களாக அமெரிக்க அரசு நிதியுதவி குறித்த செய்திகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிதி கடந்த 1961-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தொடா்பான அமெரிக்க அதிபரின் சமீபத்திய கருத்துகள் அபத்தமானவை.
எனினும், இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.
இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 2.1 கோடி டாலா் அமெரிக்க அரசு நிதியுதவியை தொழிலதிபா் எலான் மஸ்க் தலைமையிலான அந்நாட்டு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) அண்மையில் ரத்து செய்தது. இதன் நிா்வாக உத்தரவுகளில் கையொப்பமிட்ட டிரம்ப், ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் இந்தியாவுக்கு அமெரிக்க ஏன் நிதியதவி அளிக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினாா்.
தொடா்ந்து, மியாமி நகரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவா், ‘இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமா்த்த விரும்பியே, அந்நாட்டுக்கு 2.1 கோடி டாலா் நிதியுதவியை முந்தைய பைடன் நிா்வாகம் அறிவித்திருக்கிறது’ என்று கூறினாா். இக்கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.