கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!
கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேரத்தில் சின்னத்தம்பி யானை விளை நிலம், வீடுகளை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/529aed8e-0949-4119-8e6d-a18bf18e2247/148625_thumb.jpg)
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வனத்துறை அந்த யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். சின்னத்தம்பியை பிடிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வனத்துறையால் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் அடைக்கப்பட்டது. அங்கு சின்னத்தம்பிக்கு கடந்த சில ஆண்டுகளாக கும்கி யானை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/wce2t55t/IMG_20250210_WA0056.jpg)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரமடை பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை மற்றும் ஊருக்குள் புகுந்த மக்னா யானையை விரட்டும் நடவடிக்கைகளுக்கு சின்னத்தம்பி யானை கோவை அழைத்து வரப்பட்டது.
இந்நிலையில் அண்மை காலமாக தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் விளை நிலம், வீடுகள் பாதிக்கப்படுவதாகவும் 3 மனிதர்கள் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-19/65egmtkr/Screenshot20250119121009.jpg)
அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் யானையை விரட்ட டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சுயம்பு மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே அந்த இரண்டு யானைகளும் மஸ்த் (மதம்) காலகட்டத்தால் மீண்டும் டாப்ஸ்லிப் அழைத்து செல்லப்பட்டன. இதையடுத்து தடாகம் பகுதியை சுற்றி உலா வரும் காட்டு யானையை விரட்ட, டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/hlqnhkvx/IMG_20250210_WA0058.jpg)
இதே தடாகம் பகுதியில் வைத்துதான் சின்னத்தம்பி கடந்த 2019-ம் ஆண்டு பிடிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே பகுதிக்கு சின்னத்தம்பி கும்கி யானையாக வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.