ஐபிஎல் சூதாட்டம்: மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை!
கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர்.
ஐபிஎல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்துக்காக வாங்கப்பட்ட கடனை திரும்ப அளிக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1,554 கோடி பேரிடர் நிவாரண நிதி! தமிழகத்துக்கு பூஜ்யம்!
மைசூரு ராமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஜோஷி ஆண்டனி என்பவர் அவரது சகோதரி மெரிஷில் பெயரில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில், பணத்தை முழுவதுமாக இழந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜோஷியின் சகோதரரான ஜோபி ஆண்டனி மற்றும் அவரது மனைவி ஷர்மிளா ஆகியோர் தனது சகோதரி மெரிஷிலை கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டி விடியோ பதிவிட்ட ஜோஷி, அதனை அவரது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து, தனது பெற்றோரின் கல்லறைக்கு சென்ற ஜோஷி, தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, ஜோபி மற்றும் ஷர்மிளா மீது மைசூரு புறநகர் காவல் நிலையத்தில் மெரிஷில் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையை நினைத்து பயந்த ஜோஷி, ஷர்மிளா தம்பதியினர், தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].