TVK: அறிக்கை அரசியல்; `டார்கெட்' திமுக - தவெகவின் ஓராண்டு பயணம் எப்படியிருந்தது?
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது.
பட டைட்டில் விவகாரம், அரசியல் வசனங்கள், விஜய் மீதான் தனிப்பட்ட விமர்சனங்கள் என விஜய்யைச் சுற்றி எப்போதுமே அரசியல் சர்ச்சைகள் சுழன்றுகொண்டேதான் இருந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மதிய வேளையில் அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டது சர்ப்ரைஸ் ட்விஸ்ட். விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் இந்தச் சூழலில் தவெக பற்றிய குட்டி ரீவைண்ட்.
மாஸ் ஹீரோ - அரசியல் இமேஜ்:
ஒரு மாஸ் ஹீரோவாக பரிணமித்ததிலிருந்தே தன்னைச் சுற்றி சர்ச்சைகள் சூழ, அரசியல் இமேஜை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார் விஜய். திமுக, அதிமுக என மாநிலத்தின் இரண்டு கட்சிகளும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அவரின் படங்களுக்கு எதிராக நின்றிருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் 'மெர்சல்' படத்தில் வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி சம்பந்தமான வசனங்களைப் பார்த்து கொந்தளித்தது, ஹெச்.ராஜா விஜய்யை விமர்சித்தது என விஜய்க்கு அகில இந்திய அளவில் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
ராகுல் காந்தியே விஜய்க்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். படங்களில் இப்படியென்றால், நிஜத்திலும் சில சமூகப் பிரச்சனைகளுக்கு சைலன்ட்டாக களத்தில் இறங்க ஆரம்பித்தார் விஜய். பணமதிப்பிழப்பு, நீட் விவகாரம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றார். எதோ ஒரு கட்டத்தில் கட்டாயம் தேர்தல் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என்கிற ஆசை இருந்ததால்தான் ஆன் ஸ்க்ரீன்/ ஆப் ஸ்கீரின் என இரண்டிலும் தனக்கான அரசியல் இமேஜை பார்த்து பார்த்து வளர்த்தெடுத்தார். கட்சித் தொடங்குவதற்கு முன்பாகவே பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கினார்.
கட்சி ஆரம்பித்து சரியான நேரம் பார்த்து காத்திருந்த விஜய், 2024 பிப்ரவரி மாதத்தைத் தேர்வு செய்தார். ரஜினி அரசியலுக்கு வராமலேயே அரசியலிலிருந்து விலகிய நிலையில், கமலும் மநீம கட்சியை திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். ரஜினி, கமல் இருவரின் அரசியலும் செல்ஃப் எடுக்காத நிலையில் அவர்கள் சறுக்கிய இடங்களை மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தினார் விஜய்.
பிப்ரவரி 2 ஆம் தேதி `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாசகத்தோடு 'தமிழக வெற்றி கழகம்' என கட்சி தொடங்கியபோதே 'ஊழல் கபடதாரிகளும் பிளவுவாத சக்திகளும்தான் நம்முடைய எதிரிகள்' எனக் கூறி தனக்கான அரசியல் லைனை கொஞ்சம் தெளிவாகவே எடுத்தார்.
அக்டோபரில் மாநாடு:
என்னதான் பிப்ரவரி மாதமே கட்சி தொடங்கிவிட்டாலும் அக்டோபரில் மாநாடு நடத்தும் வரை சைலன்ட் மோடிலேயே இருந்தார். இடையில் விஜய்யின் கட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்துகட்டி வந்தன. சீமான் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் வரை கணக்கு போட்டு 'என் தம்பி வந்துட்டான்..' என கிடைக்கிற இடங்களிலெல்லாம் கர்ஜித்தார். உதயநிதி vs விஜய் கதையாடல் கட்டமைக்கப்பட தொடங்கியதால் திமுக முகாம் விஜய்யை முதலிலிருந்தே அபாயமாகத்தான் பார்த்தது. ஏற்கெனவே, 'ஜோசப் விஜய்' என்ற பழைய பகை இருப்பதால் பா.ஜ.கவும் அதை அப்படியே தொடர்ந்தது. அதிமுக மட்டும்தான் சலனமே இல்லாமல் இருந்தது.
கட்சி தொடங்கிய அறிவிப்புக்கும் மாநாட்டுக்கும் இடையில் அறிக்கை அரசியலை மட்டுமே விஜய் செய்துவந்தார். முக்கியத் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு வாழ்த்து மற்றும் இரங்கல் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஒரு சில இடங்களில் மட்டுமே மாநில மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார். அதிலும் சிஏஏ க்கு எதிராகவெல்லாம் இரண்டே வரியில் செறிவற்ற விமர்சனத்தை முன்வைத்து கடும் விமர்சனங்களை சந்தித்தார். இதற்கிடையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாரய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சென்று சந்தித்தார். அப்போதும்கூட பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய கருத்துகளை முன்வைக்கவில்லை. கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போது வரைக்கும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பது பெரும் குறையே.
கிளம்பிய எதிர்ப்பு - நடந்த மாநாடு:
தமிழ்நாடு முழுவதும் மாநாட்டுக்காக இடம் பார்த்திருந்தது விஜய் தரப்பு. எல்லா இடங்களிலும் எதோ ஒரு காரணத்தைச் சொல்லி இடம் வழங்க மறுத்தனர். போலீஸ் அனுமதி கொடுப்பதிலும் சிக்கல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் செப்டம்பரில் தேதி குறிக்கப்பட்ட மாநாடு அக்டோபரில் நடந்தது. ஆகஸ்ட்டில் கட்சிக் கொடியை மட்டுமே விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதும் கூட பெரிதாக எதைப்பற்றியும் பேசவில்லை. கட்சிக் கொடிக்கான விளக்கத்தை கூட மாநாட்டில்தான் அறிவிப்பேன் என்றார்.
எதிர்பார்ப்பை கிளப்பிய அந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. 4-5 லட்சம் தொண்டர்களைத் திரட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. எதிர்பார்த்த கூட்டத்தைத் திரட்டவும் செய்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் மிகக்குறுகிய நேரத்தில் நடந்து முடிந்த மாநாடு அதுவாகத்தான் இருக்கும். கூட்டம் அதிகம் இருப்பதால் விரைவில் மாநாட்டை முடிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் 2 மணி நேரத்திலேயே மாநாடு முடிக்கப்பட்டது. விஜய் 48 நிமிடங்களுக்கு உரையாற்றியிருந்தார். ஊழல் கபடதாரிகள் நம்முடைய அரசியல் எதிரி. பிளவுவாத சக்திகள் நம்முடைய கொள்கை எதிரி என்றதோடு திமுகவை கூடுதலாக அடித்தார்.
'திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்':
'அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..' 'திராவிட மாடல்னு சொல்லிட்டு ஒரு குடும்பம் சுயநலமா தமிழகத்தை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கு..' என திமுகவை ஒரே அடியாக அடித்தார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகதான் பிரதான எதிரி என தனக்கான அரசியல் லைனை பிடித்தார். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் என ஐவரைத் தன்னுடய கொள்கைத் தலைவராகவும் அறிவித்தார். எல்லாவற்றுக்கும் மேல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விசிகவின் கோரிக்கையை தொட்டு திமுக கூட்டணிக்குள் கல்லடிக்க முயன்றார் விஜய். ஆனால், திருமாவை வைத்தே விஜய்க்கு பதில் அறிக்கை விட வைத்து திமுகவும் பதிலடி கொடுத்தது
விஜய்யின் நேரடி அட்டாக்குகளால் திமுகவும் விஜய்யை அடிக்க ஆரம்பித்தது. 'நாங்கெல்லாம் எம்.ஜி.ஆரையே பார்த்தவங்க..' என திமுக ஐ.டி.விங் ரவுண்ட் கட்டியது. 'நேத்து வந்தவெல்லாம் திமுகவ அழிக்கனும். முதலமைச்சர் ஆகணும்னு நினைக்கிறான்.' என ஸ்டாலினே மறைமுகமாக விஜய்யை சாடினார். பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்ததில் பா.ஜ.க கடுப்பானது. 'திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்' என விஜய் பேசியதில் அண்ணன் - தம்பி உறவையே அறுத்துப் போட்டார் சீமான். அதன்பிறகு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
திமுக வை மட்டுமே அடித்துவிட்டு அதிமுகவை கண்டும் காணாமல் இருப்பதை எடப்பாடி தரப்பு ரசித்தது. அதிமுக சார்பிலும் விஜய் மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. சில இடங்களில் விஜய்க்கு ஆதரவாகவும் பேசினார்கள். இதற்கு பின்னாலுள்ள கணக்கு என்ன இருதரப்பும் என்ன நினைக்கிறது என்பதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் வெட்ட வெளிச்சமாகும்.
மேடைப் பேச்சு, அறிக்கைகள் என்று மட்டுமே இருந்ததால் விஜய்யை 'Work From Home' அரசியல்வாதி என அதிமுகவை தவிர அத்தனைக் கட்சிகளும் எகிறி அடித்தனர். விஜய்யும் அந்த விமர்சனங்களுக்கு ஏற்ற வகையில்தான் இருந்தார். சூட்டிங்குக்கு நடுவே கால்ஷீட் ஒதுக்கித்தான் அரசியல் வேலைகளை பார்த்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியே பரந்தூர் - ஏகனாபுரம் கிராமங்களுக்கு செல்ல திட்டமிட்டார். ஏகனாபுரத்துக்கு அருகே உள்ள பொடவூருக்கு செல்லத்தான் காவல்துறை அனுமதி கொடுத்தது. அங்கே ஒரு ரெசார்ட்டில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார் விஜய். அங்கேயும், 'நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள்தான் கில்லாடியாச்சே...' என திமுகவை மீண்டும் புரட்டியெடுத்தார்.
கட்சி ஆரம்பித்த ஓராண்டில் திமுகவை அரசியல் எதிரி என தீர்மானித்து தனக்கான அரசியல் லைனை தெளிவாக பிடித்திருப்பதுதான் விஜய்யின் சாமர்த்தியம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
வெளியான நிர்வாகிகள் பட்டியல்:
மாநாட்டை முடித்த கையோடே மாவட்ட செயலாளர்களை அறிவித்து கட்சிக்கான முழுமையான நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட நினைத்தார் விஜய். ஆனால், நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடிகள் நீடிக்க அந்த அறிவிப்பு தாமதனானது. ஆனந்த், மாவட்டம் மாவட்டமாக சென்று பேச்சுவார்த்தை நடத்தி பஞ்சாயத்துகளை தீர்த்து வைக்க முயன்றார். அதனைத் தொடர்ந்து இரண்டாமாண்டு தொடக்கத்துக்குள் நிர்வாகிகளை அறிவிக்க நினைத்தார் விஜய். ஆனால், அதையும் செய்ய முடியவில்லை.
இன்று 5 ஆம் கட்ட மா.செக்கள் பட்டியல் வெளியாகிறது. இன்னும் ஒரு கட்ட மா.செக்கள் பட்டியல் வெளியாக வேண்டும். நியமிக்கப்படும் நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டாலும் களத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கும் விஜய் முகம் கொடுக்க வேண்டும்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகளை விமர்சிக்கிறார். ஆனால், அதன் உச்சத்தில் இருப்பவர்கள் செய்வதைப் போன்றே பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தாமல் இருக்கிறார். அந்த குணாதிசயத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், கடந்த ஓராண்டில் எந்தப் பிரச்சனைகளையும் தவெக பேசுபொருளாக ஆக்கவில்லை. கள்ளச்சாரய மரணம், அண்ணா யூனிவர்சிட்டி விவகாரம் என விஜய் கையிலெடுத்து களமாடியிருக்க எத்தனையோ பிரச்னைகள் வந்தது. எல்லாவற்றிலும் ஒரு அளவோடே நின்றுக் கொண்டார். அரசியல் என்பது வெறும் தேர்தலுக்கானது மட்டுமல்ல. அது அன்றாட நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதில் இப்போது வரை விஜய் சுணங்கியே நிற்கிறார்.
மாற்றுக்கட்சியினர் சிலரை கட்சியில் இணைத்திருக்கிறார். பெரும்பாலான மா.செக்களை அறிவித்திருக்கிறார். பரந்தூர் போன்ற போராட்டக் களங்களுக்கு வரத் தொடங்கியிருக்கிறார். இனியாவது மக்களுக்கான விஜய்யின் அரசியல் வேகமெடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.
த.வெ.க -வின் ஓராண்டு, விஜய்யின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.