மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்க...
`கைவிலங்கிட்ட அமெரிக்கா, வாய் திறக்காத இந்தியா' - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்; நாடாளுமன்றத்தில் அமளி!
அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய இந்தியர்களைப் பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் கொண்டுவந்து சேர்த்தது, சி17 அமெரிக்க ராணுவ விமானம்.
இதில் 104 இந்தியர்கள் வந்திறங்கி இருக்கின்றனர். அவர்கள் இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், அவர்களை அமெரிக்காவிலிருந்து விமானத்தில் ஏற்றும்போது, கைவிலங்கிட்டுத்தான் ஏற்றியிருக்கிறார்கள். விமானத்தில்கூட, கைகளையும், கால்களையும் கட்டித்தான் வைத்திருக்கின்றனர். அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் இந்த கைவிலங்குகள் நீக்கப்பட்டன என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மத்திய அரசு இன்னும் பேசவே இல்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இன்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியிருக்கின்றன. இதையொட்டி, இன்று மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியர்களை கைவிலங்கிட்டு அமெரிக்கா அனுப்பி வைத்தது குறித்து அறிக்கை தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
தங்கள் நாட்டு மக்களை இதேபோல கைவிலங்கிட்டு அனுப்பியதற்காக, கொலம்பியா அரசு உடனடியாக அமெரிக்காவுக்கு எதிராகத் தனது கண்டன குரலைப் பதிவு செய்தது. ஆனால், இந்தியா இன்னும் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாதது, பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, "கைவிலங்கிட்ட இந்தியர்களின் புகைப்படங்களை பார்க்கும்போது, ஒரு இந்தியனாக எனக்கு வருத்தமளிக்கிறது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிருத்விராஜ் தனது எக்ஸ் பதிவில், "200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிட்டு, கால் விலங்கிட்டு குற்றவாளிகளைப் போல அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். அத்தனை பெரிய விமானத்தில் அனைவருக்கும் ஒரே ஒரு கழிவறை.
மோடி அரசால் இந்தியர்களை கண்ணியமான முறையில் இந்தியாவிற்கு கொண்டு வர விமானம் கூட ஏற்பாடு செய்யமுடியாதா?" என்று கூறியுள்ளார்.
கவுரவ் கோகாய், "மோடி அரசு ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.