``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது ...
மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்கில் மோசடி?
மும்பையில் அடிக்கடி சினிமா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பழம்பெரும் நடிகர்கள் பெயரில் வழங்கப்படுவதுண்டு. சினிமாவோடு தொடர்புடைய சில அமைப்புகள் இவ்விருது வழங்கும் விழாக்களை நடத்துவது வழக்கம். ஆனால் அதனை பயன்படுத்தி சிலர் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
சினிமா துறையில் தாதாசாஹேப் பால்கே விருது மிகவும் பிரபலம் ஆகும். அதனை சினிமா துறையில் பிரபலமானவர்களுக்கு மத்திய அரசு கொடுத்து கெளரவித்து வருகிறது. அந்த பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் பாலிவுட் பிரபலங்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து இருக்கிறது. அனில் மிஸ்ரா என்பவர் தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா விருது என்ற பெயரில் விருதுகள் வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக மும்பை பா.ஜ.க சினிமா பிரிவு நிர்வாகி சமீர் தீக்ஷித் என்பவர் மும்பை பாந்த்ரா போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அனில் மிஸ்ரா ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவியாளர் வேலை செய்யும் ஸ்பாட் பாய் வேலை செய்து வந்துள்ளார்.
அதன் பிறகு அனில் மிஸ்ரா சொந்தமாக தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா விருதுகள் என்ற ஒன்றை தொடங்கி விருதுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவருடன் அவரது மகன் அபிஷேக் மிஸ்ரா, மனைவி பார்வதி, மகள் ஸ்வேதா ஆகியோரும் சேர்ந்து விருதுகளை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த அனில் மிஸ்ரா வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்த சினிமாக்கள் மற்றும் நடிகர்களிடம் கணிசமான பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சினிமா விருதுகளை விற்பனை செய்து வந்தார். இதற்காக அரசு மற்றும் அரசு துணை நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப் பெற்றுள்ளார்.
வரும் 20ம் தேதி பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட் எண்ட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனில் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான அனுமதியை சர்வதேச டூரிஸம் பெஸ்டிவல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்று இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டுவிட்டது. அனில் மிஸ்ரா தவறான தகவலை சொல்லி சினிமா விருதுக்கு அனுமதி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அனில் மிஸ்ராவின் அமைப்புக்கு அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. மூன்று முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் மூன்று முறையும் அவரது மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
தற்போது அனில் மிஸ்ரா, அவரது மகன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும், விருது விழாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.