Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | El...
கை,கால்களில் விலங்கு: ஒரு கண்டனம்; கொஞ்சம் எதிர்ப்புகூட இல்லையா? - டி.ஆர்.பி. ராஜா
இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"டீபோர்ட் செய்யப்பட்டவர்கள் என்ன தீவிரவாதிகளா? கொலைபாதகர்களா?
அவர்கள் எல்லாருமே குஜராத், ராஜஸ்தான், ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், இந்தியர்கள் என்ற உணர்வோடு நமக்கு ரத்தம் கொதிக்கிறது.
ஏதோ ஒரு நம்பிக்கையில், இனியாவது நிம்மதியாக வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் நாட்டை விட்டு பிழைப்பு தேடி அமெரிக்கா சென்றவர்கள்.
இன்னமும் இவர்கள் இந்தியர்கள்தானே ? இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த நம் சகோதரர்கள்தானே!
இவர்களுக்கு கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லையே! எங்கோ யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க மத்திய அரசுக்கு எப்படி மனம் வருகிறது?
அடிப்படை மனித உரிமைகள்கூட அவர்களுக்கு கிடையாதா!? ஒரு கண்டனம்... கொஞ்சம் எதிர்ப்பு... அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே! அதுகூடவா முடியாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | 40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா?
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி, நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.
அவர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டபோது கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டது இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பது ஏன் என பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றன.
இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றும் நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவிடம் பேசி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளதாகவும் பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கு போடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்