காயத்தால் கம்மின்ஸ், ஹேசில்வுட் விலகல்... சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸிக்குப் பெரும் பின்னடைவு!
இந்தியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட்டும், தொடரின் முடிவில் காயமடைந்த கேப்டன் பேட் கம்மின்ஸும் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. எப்படியும், சாம்பியன்ஸ் டிராபிக்குள் இருவரும் குணமடைந்துவிடுவார்கள் என்று, உத்தேச பட்டியலில் இருவரின் பெயரையும் ஆஸ்திரேலியா சேர்ந்திருந்தது.
இருப்பினும், கடந்த சில நாள்களாகவே கம்மின்ஸும், ஹேசில்வுட்டும் சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவது சந்தேகம்தான் என தகவல்கள் வெளியாகிவந்தது. இதற்கிடையில், உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகினார். மறுபக்கம், உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.
இந்த நிலையில், கம்மின்ஸும், ஹேசில்வுட்டும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகியிருக்கின்றனர். இதுகுறித்து, ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, ``துரதிர்ஷ்டவசமாக கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்சல் மார்ஷ் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு குறிப்பிட்ட நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கு வர இயலவில்லை. இது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், உலக அளவிலான தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பை மற்ற வீரர்களுக்கு இது வழங்கியிருக்கிறது." என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், கம்மின்ஸ் இல்லாததால் ஸ்மித் அல்லது டிராவில் ஹெட் ஆகியோரில் ஒருவர் அணியை வழிநடத்தலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பரிந்துரை செய்திருக்கிறார். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்சல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் சாம்பியன்ஸ் டிராபிக்கு இல்லாதது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.