சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
``இது எளிதான முடிவல்ல; ஆனால்..." - திடீரென ஓய்வை அறிவித்த 2023 உலகக் கோப்பை வின்னர்
இந்திய அணியுடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூட ஆயத்தமாகி வருகிறது. இதனை முன்னிட்டு, இறுதிசெய்யப்படாத 14 பேர் கொண்ட உத்தேச பட்டியலை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டிருந்தது.
கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணியில், ``அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா." ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
ஓய்வுகுறித்து பேசிய மார்கஸ் ஸ்டாய்னிஸ்,``ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சிறப்பான பயணம். ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியில் இருந்த ஒவ்வொரு தருணத்துக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நாட்டைப் பிரதிநிதிப்படுத்துவதை நான் என்றும் மதிக்கிறேன். எனவே, இது எளிதான முடிவல்ல.
ஆனால், ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகி, என் வாழ்வின் அடுத்தகட்டத்தின்மீது கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். பாகிஸ்தானில் விளையாடும் வீரர்களை நான் உற்சாகப்படுத்துவேன்." என்று தெரிவித்திருக்கிறார். அதேசமயம், டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியில் தான் விளையாடுவேன் என்றும் ஸ்டாய்னிஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஸ்டாய்னிஸின் இந்த திடீர் முடிவால், சாம்பியன்ஸ் டிராபியில் அவருடைய இடத்துக்கு சரியான ஆல்ரவுண்டரைத் தேட வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு உருவாகியிருக்கிறது.