Parvathy: ``என் காதல் உடைந்து போனதற்கான காரணம் இதுதான்'' -நடிகை பார்வதி
திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.
எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் தூய்மையற்று சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. இந்த அலுவலகத்துக்குத் தினமும் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என இரு நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருமானச் சான்றிதழ், நில அளவீடு, அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சான்றிதழ் போன்ற பல தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
அரசு அலுவலகம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதுடன், அவர்களின் தேவைகள் நிறைவேறும் வரை சிலர் இங்கேயே மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படி காத்திருக்கும் பொதுமக்கள் அவசர நேரத்தில்கூட கழிவறை செல்ல முடியாத அவலநிலை இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவியது. குறிப்பாகப் பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர்.
இது குறித்து அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் கேட்டபோது, ``இந்தக் கழிவறையில் ஒரு நொடிகூட நிற்க முடியாது. உள்ளே கூட செல்ல முடியாது. மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளது. அந்தப் பக்கம் சென்றாலே மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. நாங்கள் எப்படி அவசரத்துக்கு செல்ல முடியும். மற்ற இடங்களில் இதுபோன்று இருந்ததால் அரசு அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தோ அல்ல அந்த விவகாரம் குறித்துப் புகாரளித்தோ தீர்வு காணலாம். ஆனால், அரசு அலுவலகத்திலேயே இப்படி இருந்தால் எங்கு சென்று புகார் செய்வது.
இவ்வளவு பணியாளர்கள் வேலைபார்க்கும் இந்த அலுவலகத்தில் ஒருவர் கூட இதைக் கண்டுகொள்வதில்லை. இவர்கள் முறையாகக் கழிப்பறையைப் பராமரித்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் தற்போதைய திருப்பத்தூர் ஆட்சியர் தர்பகராஜ் இவ்விடத்தைப் பார்வையிட்டுச் சென்றார். அப்போது, உடனே கழிவறையைச் சுத்தம் செய்தார்கள். ஆனால், தற்போது மீண்டும் பழைய சூழல் நிலவிக் காணப்படுகிறது" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடமும், படிவம் நிரப்பித் தருபவர்களிடமும் பேசியும், நேரடி விசிட் அடித்தும், கழிவறையின் மோசமான நிலை குறித்து விகடன் தளத்தில் "திருப்பத்தூர்: `உள்ள நுழையக்கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலையில் கழிவறை..." என்ற தலைப்பில் நவம்பர் 15-ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதன் எதிரொலியாக, அதிகாரிகள் கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். முக்கியமான அரசாங்க அலுவலகத்தை மக்களின் நலன் கருதி எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை!