இந்துவின் நடிப்பு - குறுங்கதை| My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்து காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தாள். எந்த வேலையையும் அவளால் கவனிக்க முடியவில்லை. காலை ஆறு மணிக்கு தொட்டிலுக்கு அருகே இருக்கும் அலமாரியில் ஏதோ தேடிக்கொண்டு இருந்தாள்.
பேத்தி அழுவது கூட இவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லையே! கோபமாக எழுந்து தொட்டிலை ஆட்டினார் சுப்பையா தாத்தா. ஏழு மணியாகி விட்டது. இப்போதும் இந்து கண்களில் திருட்டுத்தனமாகவே அலைந்தாள்.
அலமாரிக்கு அருகே போவாள், அதைச் சாவியால் திறப்பாள், எதையோ தேடிவிட்டு மூடிவிடுவாள். தொட்டிலில் மல்லிகை மொட்டாய் உறங்கும் பேத்தி மோனியை எட்டிக்கூட பார்க்கவில்லை. மகன் கரனுக்கு அம்மா மீது கோபமோ கோபம்.
திடீரென்று மோனி வீல் என்று அலறினாள். தேவி சமையல் அறையில் இருந்து ஓடி வந்தாள். மாமனாருக்கும் கரனுக்கும் காதில் விழுமாறு இந்துவைக் குறை கூறினாள். அப்போதும் இந்து குழந்தையைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போல் வீட்டிற்கும் தோட்டத்திற்குமாக பரபரப்பாக நடந்தாள்.
எட்டு மணியாகி விட்டது. சுப்பையாவும் கரனும் கடைக்குக் கிளம்பிவிட்டனர். இது எதையும் கவனிக்காமல் இந்து அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
'இந்து' சுப்பையா கத்தினார்.
"நீயெல்லாம் மனுஷி தானா? குழந்தையைக் கூடக் கவனிக்காமல் அலமாரியைக் குடைகிறாயே. உன் உயிரா அதில் இருக்கிறது?" கோபமாய்க் கத்திவிட்டு கடைக்குக் கிளம்பிப் போய் விட்டார்.
கரனும் தேவியும் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். கரனும் கடைக்குக் கிளம்ப தேவி மோனிக்கு பால் கொடுத்துத் தொட்டிலில் தூங்க வைத்தாள்.
மாமியார் அறியாமல் அலமாரியில் இருப்பதை அறியத் துடித்தாள் தேவி. இந்து வெளியே எப்போது போவாள் என்று காத்திருந்து ஏமாந்தாள் தேவி.
மணி பதினொன்று ஆகிவிட்டது. குழந்தை விழிப்பதற்குள் வேகமாகக் குளித்து விட்டு வர வேண்டும் என்று முனங்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள் தேவி.
இந்து குளியலறை அருகே பதுங்கி நின்றாள். குழாயில் தண்ணீர் விழும் சப்தம் கேட்டு கண்களில் நீர் முட்ட சேலை முந்தியால் வாயைப் பொத்தியவாறு சத்தமின்றி அழுதவாறு குளியலறைக் கதவை விழிகள் பிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மருமகள் உடுத்தி இருந்த உடைகள் கதவில் விழுந்ததும் வேகமாக அலமாரி இருந்த அறைக்குள் ஓடினாள் இந்து.
தொட்டிலுக்கு அருகே வருவதற்குள் இந்துவுக்கு வியர்த்துக் கொட்டியது. வேகமாகச் சுற்றிலும் பயத்தோடு பார்வையை ஓட விட்டாள். இனியும் தாங்க முடியாத அவசரத்துடன் தன் உயிரான அழகு மயில் பேத்தியைத் தொட்டிலில் இருந்து தூக்கி அடக்கி வைத்திருந்த பாசத்தை எல்லாம் முத்த மழையாகப் பொழிந்தாள் அன்புப் பாட்டி இந்து.
பத்து நிமிடம் போனதே தெரியவில்லை இந்துவிற்கு. கதவு திறந்து கொலுசுச் சத்தம் நெருங்கி வருவது அறிந்து குழந்தையைத் தொட்டிலில் போட்டு விட்டு அலமாரியில் எதையோ தேட ஆரம்பித்து விட்டாள் இந்து.
"என் குழந்தையை நீ தொட்டாலோ, பார்த்தாலோ உன் குழந்தை தனி மரமாய் நிற்பான்" என்று உத்தரவு போட்ட தேவிக்கு மட்டும் உண்மை தெரிந்தால்... நினைக்கவே இந்துவின் உடல் நடுங்கியது. தேவியின் கொலுசொலி அருகில் வரவும் அலமாரியை மூடி சாவியை இடுப்பில் செருகிக் கொண்டு விசுக் விசுக்கென நடந்தாள் இந்து.
மறுநாள் காலை இந்து பரபரப்பாக இருந்தாள். எந்த வேலையும் அவளால் கவனிக்க முடியவில்லை.
தினமும் பேத்தியைக் கொஞ்ச இது போல் பல நாடகத்தை நடத்திய இந்துவின் மூளையை எப்படிப் பாராட்டுவது!
-கலைமதி சுப்பையா
பேரையூர்
இராமநாதபுரம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...