கால்பந்து பிரபலங்கள் மூவர் பிறந்தநாள்..! ஃபிபாவின் நாட்டு நாட்டு போஸ்டருக்கு ஜூன...
கிளம்பாக்கம்: இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் கூட்டுப் பாலியல் தொல்லை - லைவ் லோக்கேஷனால் தப்பித்தது எப்படி?
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டிருக்கிறார். உடனே இளம்பெண்ணும், கோயம்பேடு வரை செல்ல வேண்டும். பேருந்துக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆட்டோ டிரைவர், இந்த நேரத்தில் கோயம்பேடுக்கு பேருந்து கிடையாது. ஆட்டோவில் அழைத்துச் செல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு டிரைவரை நம்பி இளம்பெண்ணும் ஆட்டோவில் ஏறி பயணித்திருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆட்டோ, வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
செல்லும் வழியில் ஆட்டோவை பெட்ரோல் பங்கில் நிறுத்தி பெட்ரோல் போட்டிருக்கிறார் டிரைவர். அதோடு அந்த ஆட்டோவில் மேலும் இரண்டு பேர் ஏறியிருக்கிறார்கள். அவர்கள் இளம்பெண்ணின் அருகில் அமர்ந்தப்படி சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள். அதனால், ஆட்டோ டிரைவரிடம் இளம்பெண், தனக்கு நடக்கும் கொடுமையை இந்தியில் டிரைவரிடம் கூறியிருக்கிறார். ஆனால், டிரைவரோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக ஆட்டோவை ஒட்டிச் சென்றிருக்கிறார். இரவு நேரம் என்பதால் இளம்பெண்ணின் அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. அதனால் புத்திச்சாலித்தனமாக யோசித்த இளம்பெண், தன்னுடைய செல்போனிலிருந்து மாதவரத்தில் உள்ள தோழியின் கணவருக்கு லைவ் லோக்கேஷனை ஷேர் செய்துவிட்டு ஹெல்ப் மீ என ஒரு மெசேஜை ரகசியமாக அனுப்பியிருக்கிறார்
அந்த மெசேஜைப் பார்த்த இளம்பெண்ணின் தோழியின் கணவர், உடனடியாக தாம்பரம் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆட்டோவில் இளம்பெண் கடத்தப்படுவதாக காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து இரவு டூயூட்டியிலிருந்த போலீஸாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல்கள் பகிரப்பட்டன. அன்றைய தினம் இரவு பல்லாவரம் உதவி கமிஷனர் வெங்கட்குமார், அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்கினார். உடனடியாக அவரின் தலைமையிலான போலீஸார் இளம்பெண் அனுப்பிய லைவ் லோகேஷன்படி ஆட்டோவை தங்களின் போலீஸ் வாகனத்தில் பின்தொடர்ந்தனர். அப்போது லோகேஷன் மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்.டி.ஓ அலுவலக மைதானத்தைக் காட்டியது. அங்குச் சென்ற போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஆட்டோவும் இளம்பெண்ணும் அங்கு இல்லை. அதன்பிறகு லோக்ஷேனும் காட்டப்படவில்லை.
இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ, மதுரவாயல் மாதா கோயில் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனியாக நிற்பதாக உதவி கமிஷனர் வெங்கட்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்டார். பின்னர் அவரை பத்திரமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பெண் போலீஸாரின் உதவியோடு விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட மூன்று பேரை தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``ஆட்டோவில் கடத்தப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. அதனால் வேலைத் தேடி அவர் சேலத்துக்கு வந்திருக்கிறார். சேலத்தில் வேலை இல்லாததால் சென்னையில் உள்ள இன்னொரு தோழியின் வீட்டுக்கு இளம்பெண் பேருந்து மூலம் வந்திருக்கிறார். இரவு பத்து மணிக்கு மேல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய இளம்பெண், தன்னுடைய தோழியின் கணவரிடம் போனில் பேசியிருக்கிறார்.
அப்போது அவர், கோயம்பேடு வந்துவிடு. அங்கிருந்து உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என போனில் தெரிவித்திருக்கிறார். அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை கோயம்பேடுக்கு ஆட்டோவில் வந்தபோதுதான் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்குள்ளாகியிருக்கிறார். அதே நேரத்தில் இளம்பெண் புத்திச்சாலித்தனமாக மெசேஜ் மற்றும் லைவ் லோக்கேஷனை அனுப்பியதால் அவரை 2 மணி நேரத்துக்குள் மீட்க முடிந்தது. பின்னர் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரைக் கடத்திய ஆட்டோ டிரைவர், அவரின் கூட்டாளிகள் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் மூன்று பேரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோம்" என்றனர்.