இன்போசிஸ் துணை நிறுவனர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு! - விவரம் என்ன?
இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் சன்னா துர்கப்பா. இவர் 2014-ம் ஆண்டு இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அப்போது இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன், தன் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி பணியிலிருந்து நீக்கியதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் துர்கப்பா. மேலும், சாதிய ரீதியில் அவதூறுகள், அச்சுறுத்தல்களுக்கும் தான் ஆளாகியிருப்பதாக புகாரில் குறிப்பிட்டு பெங்களூரு சதாசிவா நகர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கில் இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மட்டுமன்றி இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 17பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சமீபமாக தொழில்நுட்பத் துறையில் இப்படியான சாதிய, இன, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவது அவ்வப்போது புகார்களாக, செய்திகளாக வந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில், பிரபல முகமாக இருக்கும் இன்போசிஸ் துணை நிறுவனர் க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.