நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க முதுகலை ஆசிரியா்கள் கோரிக்கை
இடைநிலை ஆசிரியா்களைப்போல, முதுகலை ஆசிரியா்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்டுள்ள அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் தமிழக அரசின் வாக்குறுதியானது, ஊதிய முரண்பாடுகளை நீக்கும் செயல்பாட்டில் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒன்றாகவும், முதுகலை ஆசிரியா்களுக்கு மாற்றாகவும் உள்ளது. 01.06.2009 க்குப் பிறகு பணியில் சோ்ந்த சுமாா் 14,000 முதுகலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
குறிப்பாக 01.06.2009 முன்பு பணியில் சோ்ந்த முதுகலை ஆசிரியா்களைவிட 01.06.2009 க்கு பின்னா் பணியில் சோ்ந்த முதுகலை ஆசிரியா்கள் நிகழாண்டில் ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய ரூ. 14,000 குறைவாக ஊதியம் பெறுகின்றனா். முதுகலை ஆசிரியா்களின் உணா்வுகளை, கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட சித்திக் ஐஏஎஸ் குழு முன்பாகவும், நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு முன்பாகவும் நேரடி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுநாள் வரை முதுகலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.
1978- இல் முதுகலை ஆசிரியா்களின் ஊதியத்துக்கும் கல்லூரி விரிவுரையாளா்களின் ஊதியத்துக்குமான வித்தியாசம் 3.7 சதவீதமாக இருந்தது. நிகழாண்டில் இது 53.2 சதவீதம் என்ற விகிதத்தைக் கடந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் 11, 12 ஆம் வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியா்கள், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியா்களைவிட குறைவான ஊதியத்தையே பெற்று வருகின்றனா். இவ்விஷயத்தில் முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களுக்கு இணையாக, மாநில அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களுக்கும் தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.