Karun Nair: ``சாம்பியன்ஸ் டிராபி அல்ல இதுதான் என் இலக்கு" - கருண் நாயர்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு எதற்குத் துணைக் கேப்டன் பதவி உட்பட பல்வேறு கேள்விகள் எழுந்தது.
அதில், முக்கியமானது நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு, 8 இன்னிங்ஸ்களில் 779 ரன்கள் அடித்த கருண் நாயரைத் தேர்வு செய்யாததுதான்.
இத்தனைக்கும், சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள்தான், இது தன்னுடைய மூன்றாவது கம்பேக் என்றும், நாட்டுக்காக விளையாடும் தனது கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றும் கருண் நாயர் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் கருண் நாயரைப் பாராட்டி வந்தனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கிறது என்று கருண் நாயர் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த கருண் நாயர், ``இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கு இன்னும் இருக்கிறது. பல நேர்காணல்களில் அதை நான் கூறியிருக்கிறேன். உண்மையைச் சொன்னால், அது மட்டுமே என் மனதில் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு நான் பரிசீலிக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை.
உங்கள் குழந்தைப் பருவ ஹீரோவிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவது மிகப்பெரிய தருணம். அந்தச் செய்தியை அவர் (சச்சின் டெண்டுல்கர்) வெளியிட நேரம் ஒதுக்கியதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். அவரிடமிருந்து அந்த அன்பான வார்த்தைகளைப் பெற்றதற்கு உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன். எதுவாகினும், தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மேட்சும், ஒவ்வொரு இன்னிங்ஸும் முக்கியம். அதுவே எனது கவனம்." என்று கூறியிருக்கிறார்.