கும்பமேளா நெரிசல் எதிரொலி: கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளில் உ.பி. அரசு தீவிரம்
Champions Trophy : நெருங்கும் டெட்லைன்; மைதானங்களை ரெடி செய்யாத பாக்?- சாம்பியன்ஸ் டிராபி நடக்குமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
இந்திய அணியின் போட்டிகளை தவிர மற்ற அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் வைத்தே நடக்கவிருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் மைதான பராமரிப்புப் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இன்னும் முடிக்கவில்லை எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் வைத்துதான் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கப்போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவாகிவிட்டது. ஆனாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதில்லை எனும் நிலைப்பாட்டில் இருந்ததால், சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்குமா எனும் கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இதுசம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்தே ஆக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வரவே மாட்டோம் என பிசிசிஐயும் தங்கள் நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்தனர்.
கடைசியில் எதிர்பார்த்ததை போலவே பிசிசிஐக்கு சாதகமாகத்தான் ஐ.சி.சி முடிவை எடுத்தது. இந்திய அணியின் போட்டிகள் அத்தனையும் துபாயில் நடக்குமென்றும் மற்ற போட்டிகளெல்லாம் பாகிஸ்தானில் நடக்குமென பஞ்சாயத்தை பேசி முடித்து பைசல் செய்தது ஐ.சி.சி. பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று நகரங்களிலுள்ள மைதானங்களில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த மைதானங்களில் பராமரிப்புப் பணிகளை செய்யும் வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் இறங்கியது. அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது. ஜனவரி 31 க்குள் மைதானத்தின் பராமரிப்புப் பணிகளை முடித்து போட்டிகளை நடத்த ரெடியாக இருக்க வேண்டும் என்பதே ஐ.சி.சியின் எதிர்பார்ப்பு.
ஆனால், இப்போதைய நிலவரப்படி 31 ஆம் தேதி அதாவது நாளைக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் மைதான பணிகளை முடிப்பது அசாத்தியம் என பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளன. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என மூன்று நாடுகளும் ஆடும் முத்தரப்பு ஓடிஐ தொடர் நடக்கவிருக்கிறது. அதற்குள்ளும் கூட மைதானங்கள் ரெடியாக வாய்ப்பில்லை எனறே கூறப்படுகிறது. இதனால் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு முழுமையான சௌகரியத்தை கொடுக்கும் வகையில் மைதானங்கள் இருக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன் இருப்பது பெரிய சவால். ஐ.சி.சி என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!