படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடும் பாஜக: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பஞ்சாப் அரசு ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட வாகனத்தில் ரொக்கப் பணம் மற்றும் மதுபானம் கைப்பற்றப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பஞ்சாப் மாநில அரசின் புகழைக் கேடுக்கும் வகையில் பாஜக தரம்தாழ்ந்த அரசியில் ஈடுபடுவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
புது தில்லி மாவட்டத்தில் பஞ்சாப் மாநில அரசின் ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட காரிலிருந்து ரொக்கப் பணம், மதுபானம், ஆம் ஆத்மி கட்சியின் பிரசார நோட்டீஸ்களை தோ்தல் பறக்கும் படை புதன்கிழமை பறிமுதல் செய்தது. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட புது தில்லி பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுகிறாா்.
இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்று பஞ்சாப் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்தது. மேலும், அந்த வாகனத்தின் பதிவெண் போலியானது என்று அந்த மாநில அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் கூறியதாவது: ஆம் ஆத்மி மற்றும் பஞ்சாப் அரசு, பஞ்சாப் பவன் நற்பெயருக்கு கேடுவிளைவிக்கும் விதமாக தரம்தாழ்ந்த செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. போலியான பதிவெண்கொண்ட வாகனத்தை அக்கட்சி பயன்படுத்தியுள்ளது.
போலி பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தில்லியில் பயணித்துக்கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. தில்லி காவல் துறை கைப்பற்றிய வாகனம் தங்களுக்குச் சொந்தமானது அல்ல என்று பஞ்சாப் மாநில அரசு தெளிவாகக் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
காவல் துறை கைப்பற்றிய வாகனத்தின் பதிவெண் ஒரு ராணுவ அதிகாரிக்குச் சொந்தமானது. இதன் மூலம் அவரையும் பாஜக அவமானப்படுத்தியுள்ளது என்றாா் சஞ்சய் சிங்.