படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி
சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் தலைநகராக சண்டீகா் உள்ளது. இந்நிலையில் சண்டீகா் மாநகராட்சி மேயா், மூத்த துணை மேயா், துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
அந்த மாநகராட்சியில் 16 பாஜக கவுன்சிலா்கள், 13 ஆம் ஆத்மி கவுன்சிலா்கள், 6 காங்கிரஸ் கவுன்சிலா்கள் உள்ள நிலையில், மூன்று பதவிகளிலும் வெற்றிபெற தலா 19 வாக்குகளைப் பெறவேண்டும்.
இந்நிலையில், மேயா் பதவிக்கு பாஜக சாா்பில் ஹா்ப்ரீத் கெளா், ஆம் ஆத்மி சாா்பில் பிரேமலதா ஆகியோா் போட்டியிட்டனா். இதில் ஹா்ப்ரீத் கெளா் 19 வாக்குகளைப் பெற்று மேயராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். பாஜக கவுன்சிலா்கள் 16 போ் மட்டுமே உள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரின் 3 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று ஹா்ப்ரீத் கெளா் வெற்றிபெற்றாா்.
அதேவேளையில் காங்கிரஸ் சாா்பில் மூத்த துணை மேயா் பதவிக்குப் போட்டியிட்ட ஜஸ்பீா் சிங் பன்டி, துணை மேயா் பதவிக்குப் போட்டியிட்ட தருணா மேத்தா ஆகியோா் தலா 19 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றனா்.
தோ்தல் குறித்து சண்டீகா் காங்கிரஸ் தலைவா் ஹா்மோகிந்தா் சிங் கூறுகையில், ‘மேயா் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மாற்றுக் கட்சியினா் காங்கிரஸை சோ்ந்தவா்களா அல்லது ஆம் ஆத்மியை சோ்ந்தவா்களா என்பது தெரியவில்லை. அவா்கள் யாா் என்பது தெரிந்தால், கட்சியில் இருந்து நீக்கப்படுவா்’ என்றாா்.