பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளக் கூடாது: சாா்பு-நீதிபதி ...
Shan Masood: ``உங்கள் கேள்வியில் மரியாதை இல்லை" - செய்தியாளரிடம் கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் அபார வெற்றிபெற்று, தொடரை சமன் செய்திருக்கிறது. முதல் டெஸ்டில், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்குள் சுருட்டி, 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 169 ரன்களுக்குள் சுருட்டினர்.
பின்னர், வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை 154 ரன்களுக்குச் சுருட்டி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 244 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை 133 ரன்களுக்குள் சுருட்டி அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ். இந்தப் போட்டியில், 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமல் வாரிக்கன், இந்தத் தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் வென்றார். மேலும், கடைசி டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம், கடத்த 34 ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லவில்லை என்ற மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ்.
இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத், பத்திரிகையாளரின் கேள்வியால் கோபமடைந்த சம்பவம் வேகமாகப் பரவிவருகிறது. முன்னதாக, பத்திரிகையாளர் ஒருவர் பாகிஸ்தானின் தோல்வியைக் குறிப்பிட்டு, `தாமாக கேப்டன் பதவியிலிருந்து விலகுவீர்களா அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்குமா?' என்று ஷான் மசூத்திடம் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்க மறுத்த ஷான் மசூத், அடுத்த கேள்விக்கு நகர்ந்தார். ஆனால், அந்தப் பத்திரிகையாளர் மீண்டும் குறுக்கிட்டு தனது கேள்விக்குப் பதில் கோரினார்.
அப்போது, கோபமடைந்த ஷான் மசூத், ``உங்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது அதை நான் மதிக்கிறேன். ஆனால், உங்கள் கேள்வியில் அவமரியாதை இருக்கிறது. என்னையும், எங்கள் வீரர்களையும் நீங்கள் அவமதிக்க முடியாது. நாங்கள் பாகிஸ்தானுக்காக விளையாடுகிறோம். இதுபோன்ற அவமரியாதையை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் எந்த முடிவுகளையும் வீரர்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வார்கள். நாங்கள் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்று முயற்சிக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் பாராட்ட வேண்டும். சொந்த மண்ணில் நடந்த கடைசி நான்கு டெஸ்டில் மூன்றில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்." என்றார்.
கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் நோமன் அலி, இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.