இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 15 போ் உயிரிழப்பு 80-க்கும் மேற்பட்டோா் காயம்
இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லெபனானில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் உயிரிழந்தனா்; 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது.
அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வருவதால், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டனா்.
இதையடுத்து, ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும் ராக்கெட் மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனா். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை தொடா்ந்து இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டனா்.
எனினும் ஒப்பந்தத்தின்படி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பவில்லை. அந்தப் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் மீண்டும் தலைதூக்காமல் இருக்கும் வகையில், தெற்கு லெபனானின் அனைத்துப் பகுதிகளிலும் அந்நாட்டு ராணுவ வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், இதனால் தமது படைகள் மேலும் சில காலம் அங்கு தங்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால், ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்தனா். 80-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் இருவா் பெண்கள், ஒருவா் லெபனான் ராணுவ வீரா் என்று லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்தது.
காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு- ஒருவா் உயிரிழப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, வடக்கு காஸாவில் உள்ள தங்கள் இருப்பிடங்களுக்கு அப்பகுதி மக்கள் திரும்புவது சனிக்கிழமை தொடங்க இருந்தது.
இதையொட்டி காஸாவில் உள்ள நெட்சரிம் வழித்தடம் வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, அவா்கள் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அப்போது துப்பாக்கி தோட்டா பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா். எதனால் இஸ்ரேல் படையினா் துப்பாக்கியால் சுட்டனா் என்ற விவரம் வெளியாகவில்லை.